ஒரு கணம் நெகிழ்ந்து தான் போனேன்!


நேற்று வேலை நிமித்தமாக புதுச்சேரி
வரை பயணம். மதியம் மணி 1:10 இருக்கும்.
வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்காக
அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தேன்.

நான் இருந்த இடத்திலிருந்து சுமார்
2 கிமீ தொலைவில் ஒரு ஆர்ச் இருப்பதாகவும்
அதற்குப் பக்கத்தில் ஒரு பள்ளிவாசல்
இருப்பதாகவும் விசாரித்துத் தெரிந்து
கொண்டேன். தொழுகைக்கு நேரமாகி
விட்டதால்
அருகிலிருந்த ஆட்டோ நிறுத்தத்திற்கு
விரைந்து அந்த ஆட்டோ ஓட்டுநரை அழைத்தேன்.

அவருடைய நெற்றிப்பொட்டு அவர் இந்து
மதத்தைச் சேர்ந்தவர் என எனக்கு குறிப்பால்
உணர்த்தியது.

"அண்ணே அந்த ஆர்ச் வரைக்கும் போகனும்,
எவ்ளோணே ஆகும் ?"

அவர் "40 ரூபா ஆகும் தம்பி" என்றார்.

"என்னணே இவ்ளோ ரேட் சொல்றீங்க..
2 கிலோமீட்டர் தானணே ?" ஒரு 30 ரூபா
போட்டுக்கோங்கணே" என்றேன்.

"திரும்பி வரும் போது சவாரி இருக்காதுப்பா..
மினிமம் சார்ஜே 40 ரூபா தான் தம்பி"
வர்றதுனா வாங்க" என்றார்.

தொழுகைக்கு நேரமாகி விட்டதால்,
"சரி வண்டிய எடுங்கணே" என்றேன்.

ஆர்ச்சை நோக்கி ஆட்டோ கிளம்பியது.
இடதுபுறம் பார்த்துக்கொண்டே வந்தேன்.
ஆர்ச்சுக்குப் பக்கத்தில் ஒரு
பள்ளிவாசல் தெரிந்தது.

"அண்ணே வண்டிய ஓரமா நிறுத்துங்க..
இங்க தான் எறங்கனும்" என்றேன்.

அவர் "ஓ இன்னைக்கு வெள்ளிக்கெழம..
மசூதிக்கு போறீங்களா தம்பி ?" என்று கேட்டார்.

"ஆமாங்கண்ணே" என்று சொல்லிக்கொண்டே
இரண்டு இருபது ரூபாய் நோட்டுக்களை
அவரிடம் நீட்டினேன்.

அதை வாங்கி தன் கையில் வைத்துக் கொண்டவர்,
தன் சட்டைப்பையிலிருந்து ஒரு பத்து ரூபாய்
நோட்டை எடுத்து என்னிடம் நீட்டினார்.

"எதுக்குணே ?"

"வச்சுக்கோ தம்பி., 30 ரூபா போதும்"
என்று சொல்லிவிட்டு ஒரு புன்முறுவலோடு
என்னிடமிருந்து விடைபெற்றார் !

இசுலாமியர்கள் மீது இந்த பாழாய்ப் போன
ஊடகங்கள் ஏற்படுத்தி வைத்திருக்கும்
'அந்த' மாய பிம்பத்தைத் தாண்டியும்,
இந்து சகோதரர்கள் இசுலாமியர்கள் மீது
வைத்திருக்கும் கண்ணியத்தையும்
அன்பையும் நினைத்து அந்த ஒரு கணம்
நான் நெகிழ்ந்து தான் போனேன் !

Comments

Popular Posts