இருள்

நான்கு வருடங்களுக்கு முன்பு எழுதியது..
பிப்ரவரி 2021
கடந்த 2 மாத காலமாக இரவில் விழிப்பு ஏற்பட்டால் மீண்டும் தூக்கம் வர மறுக்கிறது. சில காரணங்களால் மனைவி, பிள்ளை சொந்த ஊரில் இருக்கிறார்கள். யாருமே இல்லாததால் நடு ஹாலில் தரையில் மெத்தையை விரித்து தூங்குவது வழக்கம். நான்கு பேர் தங்க வேண்டிய வீட்டில் நான் ஒருவன் மட்டும் தனியாகத் தூங்குவதால் ஒரு நிசப்தம், பேரமைதி நிலவுகிறது. சிறிய சத்தம் கூட பூதாகரமாக கேட்கிறது. மனம் படபடத்து விடுகிறது. இரவு 10 மணிக்கு மேல் சமையலறையிலிருந்து ஒரு சத்தம் 30 விநாடிகளுக்கொருமுறை வருகிறது. சில நேரம் 45 நொடிகள் பிடிக்கிறது. டைமர் வைத்து செக் செய்து விட்டேன். மேலிருந்து பாத்திரத்தின் மீது ஒரு சிறிய கல் விழுவது போன்று இருக்கிறது. பகலில் இந்தச் சத்தத்தை கேட்டதே இல்லை. இரவில் மட்டும் கேட்கும் போது பீதியாக இருக்கிறது. பயத்துடனே தூக்கம் வர தாமதிக்கிறது. போர்வையை இழுத்து மூடி ஒரு ஜனாஸா போல் படுத்துக்கொள்வேன். எழுந்து சமயலறைக்குச் சென்று என்னவென்று பார்க்க தைரியமில்லை.

சிந்தனையை வேறுபக்கம் திருப்பி தூக்கத்தை வலுக்கட்டாயாமாக திணிக்க வேண்டியிருக்கிறது. எப்படியோ தூங்கிவிட்டாலும் இடையில் முழிப்பு வந்துவிட்டால் அதோகதிதான். மீண்டும் தூக்கம் வருவதற்குள் விடிந்துவிடும். பிரச்சினையை வீட்டம்மாவிடம் சொன்னேன். "வீட்டுக்குள்ள நுழையும் போது, வீட்ல யாரும் இல்லன்னாலும் ஸலாம் சொல்லிட்டு நுழைங்க, இடையில முழிப்பு வந்தா ஆயத்துல் குர்ஸி ஓதிட்டு படுங்க" னு சொன்னாங்க. ஆஃபீஸ் முடித்து திரும்பியதும் யாருமில்லாத வீட்டுக்குள்ள ஸலாம் சொல்லிட்டு போய் பார்த்தேன், அப்போ தான் வீட்டுக்குள்ள யாரோ இருக்காங்களோனு பீதியாகுது.

நேற்று ஒரு சம்பவம். அதுவும் பகலில். அலுவலகம் முடித்து எப்போது வீட்டுக்குள் நுழைந்தாலும் ஃபேன் ஸ்விட்சை ஆன் செய்து விட்டுத்தான் ரெஃப்ரஸ் ஆவது வழக்கம். ஃபேன் எப்போதும் நான்கில் தான் ஓடும். நேற்று ஸ்விட்சை ஆன் செய்துவிட்டு ரெகுலேட்டரை மூன்றாம் நம்பரில் வைத்துவிட்டு முகங்கழுவச் சென்றுவிட்டேன். சிறிதுநேரம் சாயலாம் என மெத்தையில் சரிந்தேன். பக்கத்திலிருந்த எக்ஸ்டென்சன் பாக்ஸில் மொபைலை சார்ஜ் போட்டுக்கொண்டே முகப்புத்தகத்தில் மூழ்கினேன். ஒரு 10 நிமிடம் இருக்கும், மேலே பார்க்கிறேன் ஃபேன் சுற்றவில்லை அப்படியே நிற்கிறது. ஸ்விட்ச் ஆன்-ல் இருக்கிறதா என படுத்துக்கொண்டே பின்புறம் இருக்கும் ஸ்விட்ச் பாக்ஸை நோக்கினேன். ஆனில்தான் இருந்தது. கரண்ட் இல்லையோ என நினைத்துக்கொண்டே மொபைலை பார்த்தேன் சார்ஜ் ஏறிக்கொண்டிருந்தது. ஃபேன் பழுதாகி விட்டதோ என நினைத்து எழுந்துசென்று ஸ்விட்ச் பாக்ஸை பார்த்தேன் பக்கென்று இருந்தது.

ரெகுலேட்டர் ஜீரோவில் இருந்தது. மூன்றாம் நம்பரில் இருந்த ரெகுலேட்டரை யார் ஜீரோவில் வைத்தது, நாம் மட்டும்தானே இருக்கிறோம். ஏற்கனவே இருந்த பீதியோடு இந்த பீதியும் சேர்ந்துகொள்ள பேதி வருவது போலிருந்தது. வீட்டுக்குள்ள நம்மள தவிர 'வேற என்னமோ இருக்குபோல' என நினைத்துக்கொண்டு நைஸாக நடந்து வீட்டைவிட்டு வெளியே போய் திண்ணையில் அமர்ந்துகொண்டேன்.

உள்ளூற பயம் துருத்திக்கொண்டு நின்றாலும், 'வயசு 30 ஆகுது சின்னபுள்ள மாதிரி பயந்துக்கிட்டு இருக்கியேடா' என மனசாட்சி ஒரு கையை வெளியில் நீட்டி செவிட்டில் அறைந்தது. மனசை திடப்படுத்திக்கொண்டு என்ன நடந்திருக்கும் என யோசித்துப் பார்த்தேன். ஒரு உண்மை புலப்பட்டது.

வீட்டிற்குள் நுழைந்து ஃபேனை ஆன் செய்த போது ரெகுலேட்டரை வலப்புறமாகத் திருப்பி மூன்றில் வைப்பதற்கு பதிலாக இடப்புறமாகத் திருப்பி ஜீரோவில் நான்தான் வைத்திருக்கிறேன். ஃபேன் ஓடுகிறதா இல்லையா என்பது கூட தெரியாமல் மொபைலில் மூழ்கி இருந்திருந்திருக்கிறேன். அடப்பாவி கிராதகா! என்னை நானே திட்டிக் கொண்டேன்.

இதெல்லாம் ஓகே, அப்போ நைட்டு சமையலறையிருந்து வரும் அந்த சத்தம்?

அதையும் பார்த்துவிடலாம் என இரவு 10 மணிக்கு மேலாக சமையலறை லைட்டை ஆன் செய்துவிட்டு ஹாலில் உட்கார்ந்திருந்தேன். உடன் துணைக்கு டிவியை ஆன் செய்து ம்யூட்டில் வைத்துக்கொண்டேன். சரியாக 10:10 க்கு அந்தச் சத்தம் வந்தது. சத்தம் வந்த திசையை நோக்கி சமையலறைக்குள் மெதுவாகச் சென்றேன்...

(தொடரும்..)

-யாஸிர் கேயார்

முதல் சிறுகதை - தமிழ் https://kryasir.blogspot.com/2023/02/blog-post.html

Comments

Popular Posts