முதல் சிறுகதை

6 வருடங்களுக்கு முன்பாக எழுதியது..

சிறுகதை

எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான் RK Risay. அதென்ன RK Risay, கடைசியில் சொல்கிறேன். மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான பாரதியார்/பாரதிதாசன் பாட்டுப் போட்டிகள் மற்றும் பேச்சுப் போட்டிகளுக்கான அறிவிப்பு வந்தது. ஒவ்வொரு முறையும் இதே போன்று அறிவிப்புகள் வரும்போது, முதல் ஐந்து ரேங்குகள் எடுக்கும் மாணவர்களை தயார்படுத்தி கூட்டிச் சென்று விடுவார் தமிழய்யா. தமிழ் பண்டிட் என்றும் அவரை அழைப்பார்கள். நல்ல தமிழ்ப் புலமையும் ஞாபக சக்தியும் மிக்கவர். ஒரு வருடத்திற்கு முன்பு தற்செயலாக அவரைச் சந்தித்த போது கூட அவனை ஞாபகம் வைத்து நலம் விசாரித்தார். மெய்சிலிர்த்துப் போனான் Risay.

அந்தப் பாட்டுப் போட்டிக்கு, பாரதிதாசன் பாடல் ஒன்றை மெட்டோடு சொல்லிக் கொடுத்து அவனை மனப்பாடம் செய்ய வைத்தார்.

"தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்" என்ற பிரபல்யமான பாரதிதாசன் பாடல் அது. எம்எஸ்வி இசையில் பி.சுசிலா பாடியிருப்பார். E.M.நாகூர் ஹனீஃபா இன்னொரு மெட்டில் பாடியிருப்பார். இவனோட சாய்ஸ் எம்எஸ்வி.

ஊரில் நடக்கும் ஆண்டு விழாக்களில் பேச்சு/நாடகம் மற்றும் பாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட அனுபவம் இருந்ததால், இந்தப் பாடலை இலகுவாகக் கற்றுக்கொண்டு தமிழய்யா முன் பாடிக்காட்டி நல்ல பெயர் எடுத்தான் Risay. அவன் மீது முழுநம்பிக்கை வைத்திருந்தார் தமிழய்யா.

லீக் சுற்றுக்கான போட்டி நாள் வந்தது. இன்னொரு பள்ளியில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அனைவரும் அங்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். லீக் சுற்று என்பதால் பல பள்ளிகளிலிருந்து வந்திருக்கும் போட்டியாளர்களை ஒரு வகுப்பறையில் அமரவைத்து அங்கேயே பாடிக்காட்டச் சொல்லி தேர்வு செய்வார்கள் தேர்வாளர்கள். பாரதியார்/பாரதிதாசன் பாடல்களுக்கான வகுப்பைறக்கு Risay- யும் தமிழய்யாவும் அழைத்துச் செல்லப்பட்டார்கள். உள்ளே ஒரு மாணவன் கூட இல்லை. அங்கே இருந்த கிட்டத்தட்ட 30 பேரும் மாணவிகள். Risay மட்டும் மாணவன். இந்த நேரத்தில் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த Risay பற்றி ஒரு சின்ன அறிமுகம். Risay ஒரு எதிர்பாலின கூச்ச சுவாபி. படித்துக் கொண்டிருப்பது ஆண்கள் பள்ளியில். கூட்டமாக நிற்கும் பெண்களைக் கண்டால் மனசு படபடக்கும். அந்த இடத்தைக் கடப்பதற்குள் ஹார்ட் பீட் எகிறி குதிக்கும்.

இப்படிப்பட்ட ஒருவனை 30 மாணவிகளுக்கு மத்தியில் பாரதிதாசன் பாடல் பாட அழைக்கிறார்கள். உள்ளுக்குள் ஒரு உதறலுடன் அத்தனை மாணவிகளுக்கும் மத்தியில் இந்தப் பாடகன்(!) தன் முதல் வரியை ஆரம்பிக்கிறான்.

"தமிழுக்கும் அமுதென்று..." என்று மெட்டோடு பாடும் போதே குரல் கம்முகிறது. தொண்டை இழுத்துப் பிடிக்கிறது. சுதாரித்துக் கொண்டு ஒரு சின்ன கணைப்புடன் மீண்டும் முதல் வரி, "தமிழுக்கும் அமுதென்று.." முடியவில்லை. மெட்டும் வரவில்லை. வெடவெடத்துப் போனான். திருக்குறள் மாதிரி முழுப்பாடலையும் கடகடவென வாசித்துவிட்டு வேர்த்து விறுவிறுத்து வகுப்பறையை விட்டு வெளியே வந்தான்.

தமிழய்யா தலையில் அடித்துக் கொண்டார்!

பின்பு அவன் பாட்டுப் போட்டியில் கலந்து கொள்வதே இல்லை..

முற்றும் 😐

RK Risay - பெயர் விளக்கம்: வலமிருந்து இடமாகப் படிக்கவும்

#தமிழும்_நானும்
#தாய்மொழி_தினம்

Comments

Popular Posts