உள்ளத்தில் உதித்த நல்லிணக்கம்

நடந்து முடிந்த இங்கிலாந்து ஆஸ்திரேலியா இடையிலான ஆஸஸ் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது. இறுதிப்போட்டி முடிந்து அனைத்து வீரர்களும் கொண்டாட்டத்திற்கு தயாரான தருணம். ஆஸியில் மது பாட்டில்கள் இல்லாமல் கொண்டாட்டம் இல்லை. பியர் பாட்டில்களை குலுக்கிப் பீய்ச்சி அடித்து வெற்றிக்களிப்பை வெளிப்படுத்துவது போல் ஊடகங்களுக்கு போஸ் கொடுப்பது ஆஸி வீரர்களின் வழக்கம். மது பாட்டிலின் மூடியைக் கழற்றி பீய்ச்சி அடித்து கொண்டாட ஆரம்பிக்கிறார்கள் சக வீரர்கள். அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் இடைமறித்து மது பாட்டில்களை தனியே வையுங்கள் என சைகை செய்கிறார். அங்கே தனியே நின்று கொண்டிருந்த சக வீரரான உஸ்மான் கவாஜாவை கொண்டாட்டத்தில் தங்களோடு பங்குகொள்ளுமாறு அழைக்கிறார். இந்தக் காணொளி இணையத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

உஸ்மான் கவாஜா ஏன் தனியே நின்றுகொண்டிருந்தார்?

அவர் ஒரு இஸ்லாமியர், மது அவருக்கு தடுக்கப்பட்டது (ஹராம்). கொள்கைப்பிடிப்பில் உறுதியாக இருந்ததால் மதுப்பாட்டிலை பீய்ச்சி அடிக்கும் தனது அணியினரின் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளாமல் தனியே நின்றுள்ளார்.

பேட் கம்மின்ஸ் ஏன் மதுப்பாட்டில்களை ஒதுக்கி வைத்துவிட்டு உஸ்மானை அழைத்தார்?

சக வீரரான உஸ்மானின் கொள்கைப்பிடிப்பு கம்மின்ஸ் க்கு புரிகிறது, அவரது நம்பிக்கையை மதித்து மதுபாட்டில்களை ஒதுக்கி வைத்துவிட்டு உஸ்மானை அழைக்கிறார். அதையே தனது பேட்டியிலும் தெரிவிக்கிறார்.


இதுபோன்ற நற்செயல்களே மனிதர்களிடையே இணக்கத்தை ஏற்படுத்தும். நல்லிணக்கம் என்பது இவ்வாறுதான் உருவாக வேண்டுமென ஆசைப்படுகிறேன். இந்தியா போன்ற பன்மைச் சமூகத்தில் மத நல்லிணக்கம் என்ற பதமே தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. நடைமுறையிலும் அதைத்தான் காண முடிகிறது. ஒரு மதத்தை பின்பற்றக்கூடியவர் இன்னொரு மதத்தவர் செய்யும் சடங்கு சம்பிரதாயங்களை செய்வதுதான் மத நல்லிணக்கம் என்று இங்கு தவறாகக் கற்பிக்கப்படுகிறது. 

உண்மையில் நல்லிணக்கம் என்பது, சக மனிதனின் நம்பிக்கைக்கு மதிப்பளித்து, அவனுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது என்பதை புரிந்து நடந்துகொள்வதே! இதுபோன்ற நற்செயல்களால் தான் இணக்கம் ஏற்படும். மக்களின் உள்ளத்திலிருந்து அது உதிக்க வேண்டும் கம்மின்ஸை போல!

வீடியோ லிங்க்

Comments

Popular Posts