மரணம் எனும் எய்யப்பட்ட அம்பு

கடந்த ஒரு வார காலமாக என்னுடைய டைம்லைனில் மரணம் சம்பந்தமான பதிவுகள் அடிக்கடி தென்படுகின்றன. ``இரண்டு மணி நேரத்திற்கு முன்பு வரை கூட ஒரு பதிவிட்டிருந்தார், ஆனால் இப்போது இல்லை`` போன்ற திடீர் மரணங்கள் மனதை திக்குமுக்காடச் செய்கின்றன. இந்த நிமிடம், இந்தக் கணம் மரணம் வந்தால் நம் கையில் என்ன அமல் மிஞ்சியிருக்கிறது என்பதை நினைக்கும் போது, பயமே மிஞ்சுகிறது. மனித அறிவால் வெல்லவே முடியாத ஒரு நிகழ்வு என்றால் அது மரணம் மட்டுமே.

முன்னால் திரைப்பட நடிகை சனாகான் தன்னுடைய நடிப்புத் தொழிலிருந்து முற்றிலுமாக விலகி இஸ்லாமிய வாழ்வியலை கடைபிடித்து வருகிறார். அவர் தன்னுடைய Instagram பக்கத்தில் The Scariest Ayah of Quran என்ற தலைப்பிட்ட ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அதில் இறந்துபோன ஆன்மா ஒன்று சூரா அல்-முஃமினூன் ல் வரக்கூடிய கீழ்க்கண்ட வசனத்தைக் குறிப்பிட்டு இறைவனிடம் கைகூப்பி நிற்பதைப் போன்ற ஒரு படம்.

حَتّٰٓى اِذَا جَآءَ اَحَدَهُمُ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُوْنِۙ‏
அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்: “என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!” என்று கூறுவான்.
(அல்குர்ஆன் : 23:99)

அந்தப் புகைப்படம் உண்மையில் பயத்தை நடுக்கத்தை ஏற்படுத்தியது. அந்தக் கைகூப்பி நிற்கும் ஆன்மாவாக நாம் ஒருபோதும் இருந்துவிடக் கூடாதென உள்ளம் படபடத்தது. அதே பதட்டத்துடன் சூரா அல் முஃமினூனை இறுதி வசனம் வரை தமிழாக்கத்துடன் படித்து முடித்தேன். இறுதி வசனத்தில் இறைவன் ஒரு பிரார்த்தனையுடன் ஆறுதல் தந்தான்.

وَقُلْ رَّبِّ اغْفِرْ وَارْحَمْ وَاَنْتَ خَيْرُ الرّٰحِمِيْنَ‏
இன்னும், “என் இறைவனே! நீ என்னை மன்னித்துக் கிருபை செய்வாயாக! நீ தான் கிருபையாளர்களிலெல்லாம் மிக்க மேலானவன்” என்று (நபியே!) நீர் பிரார்த்திப்பீராக!
(அல்குர்ஆன் : 23:118)

ஆனால், மௌலானா சையித் குதுப் அவர்கள் மரணத்தை அணுகிய விதம் ஆச்சரியத்தை அளிக்கிறது. அன்னார், மரணத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் ``நான் மரணத்தைப் பார்க்கிறேன். எங்கும் வியாபித்து நிறைந்திருக்கும் வாழ்வின் சக்திகளுக்கு அருகில் ஓர் அற்ப அம்சமாகவே அது எனக்குத் தெரிகிறது. வாழ்க்கை என்ற உணவுத் தட்டிலிருந்து சிந்தும் ஒரு பருக்கையைப் பொறுக்கி உண்பதைத் தவிர வேறெதனையும் அதனால் செய்துவிட முடிவதில்லை`` என தனது `ஆத்மானந்தங்கள்` நூலில் குறிப்பிடுகிறார். இந்தக் கணம் மரணம் வந்தாலும் அதை மகிழ்வோடு ஏற்றுக் கொள்வேன் என்கிறார். சமீபத்தில் இறப்பெய்திய மர்ஹூம் மௌலானா ஹாரிஸ் ஜமாலி ஃபய்யாஜி ஹஜ்ரத் அவர்களின் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. ``கொரோனாவின் ஆரம்பகால கட்டங்கள் பீதியை கிளப்பின. ஆனால் தற்போது கொரோனாவோடு வாழப்பழகி விட்டோம் அல்லவா, அதைப்போல மரணம் என்பது அனைவர் வாழ்விலும் உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று. மரணத்தோடு வாழப் பழகிக்கொள்வோம்`` என நகைச்சுவை கலந்த யதார்த்தத்தோடு பகிர்ந்திருந்தார்.

இப்படி மரணத்தைப் பற்றிய பதிவுகளால் சூழ்ந்திருந்த போதுதான், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மௌலானா மௌலவி கணியூர் இஸ்மாயில் நாஜி ஹஜ்ரத் அவர்கள், இமாம் அஷ்ஷஃராவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் கூற்று ஒன்றை மேற்கோள் காட்டி தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்த பதிவொன்று கண்ணில் பட்டது.

``
நீ இறந்து விடுவாய் என்பதை உறுதிப்படுத்திக்கொள்
மரணம் எனும் அம்பு 
இப்பொழுதே உன்மீது எறியப்பட்டுவிட்டது
அம்பு விடுவிக்கப்பட்டுவிட்டது
ஆனால் உனது ஆயுள் என்பது அந்த அம்பு உன்னை  வந்தடையும் தூரம்தான்

``
இப்படி எல்லார் வாழ்வின் மீதும் அம்பு ஏவப்பட்டு விட்டது. எந்த திசையிலிருந்து, எப்போது, நம்மீது வந்து பாய இருக்கின்றது என்பதை நாம் அறியாதிருக்கிறோம். அம்பு பாயும் வேளை இறைப்பொருத்தம் பெற்ற அடியானாக நெஞ்சில் ஏந்தி மண்ணில் சாய்ந்துவிட வேண்டும் யா ரப்பே!

-யாஸிர் கேயார்

Comments

Post a Comment

Popular Posts