நெற்றித் தழும்பும் டைல்ஸ் தரைகளும்!

முன்பெல்லாம் ஒருவர் தொழுகையாளியா இல்லையா என்பதை
அவருடைய நெற்றித் தழும்பை வைத்தே கண்டுபிடித்து
விடலாம். தாடி, தொப்பி போன்ற வெளி அடையாளங்களைப்
போல, ஒருகாலத்தில் நெற்றித்தழும்பும் முஸ்லிம்களின் வெளி அடையாளமாக இருந்தது.
நெற்றித்தழும்பை வைத்தே 'இவர் முஸ்லிம்' என்று
பிறமதத்தவர்கள் அடையாளம் கண்டுகொண்ட காலமும்
உண்டு.

ஆனால் இப்பொழுது நெற்றித் தழும்புடைய முஸ்லிம்களைக்
காண்பதே அரிதான ஒன்றாக இருக்கிறது. காரணம், இன்று தொழுகையாளிகள் வெகுவாகக் குறைந்து விட்டார்கள்.
தொழக்கூடியவர்கள் கூட ஃபர்ளுத் தொழுகையோடு
தங்களது கடமைகளை முடித்துக் கொள்கிறார்கள்.
சுன்னத், நஃபில் போன்ற உபரி வணக்கங்களை
தெழுகையாளிகள் மறந்து போனதன் விளைவு, நெற்றித்தழும்பும்
மறைந்து போனது. ஏனென்றால் அதிகமதிகம் ஒருவர்
ஸஜ்தா செய்யும் போதுதான் நெற்றித்தழும்பு ஏற்படுகிறது.

தொழுகையாளிகளின் நெற்றித்தழும்பு மறைந்து
போனதற்கு இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறது.
முன்பெல்லாம் பள்ளிவாசல்கள் கட்டாந்தரைகளாக
இருந்தன. கோரைப் பாய்களைத் தான் தொழுகை விரிப்புகளாகப்
பயன்படுத்தி வந்தார்கள். தரையிலோ கோரைப்பாயிலோ
நெற்றியை வைத்து அடிக்கடி ஸஜ்தா செய்து, நெற்றி
காய்த்து  தழும்பாக மாறியது.

ஆனால் இன்று அப்படியா.. பள்ளிவாசல்களில் கட்டாந்தரைகளெல்லாம்
டைல்ஸ் தரைகளாகி விட்டன. கோரைப் பாய்களெல்லாம் ஸ்பான்ச் விரிப்புகளாக மாறிப்போனது. எங்கள் ஊர்ப்
பள்ளிவாசல் கூட இப்போது டைல்ஸ் தரைக்கு அப்டேட்
ஆகிக் கொண்டிருக்கிறது. டைல்ஸ் தரையிலும் ஸ்பான்ச்
விரிப்பிலும் இனி எவ்வளவு ஸஜ்தாக்கள் செய்தாலும்
நெற்றித்தழும்பு உண்டாக வாய்ப்பில்லை.

எல்லாம் ஒரு காலம்!

காலத்திற்கேற்ப பள்ளிவாசல்கள் மெருகூட்டப்பட்டுக்
கொண்டே இருக்கின்றன. ஆனால் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்
அவனுடைய இறையச்சம் பாழடைந்து போய் கிடக்கின்றது!

Comments

Post a Comment

Popular Posts