காந்தாரா - ஆபத்தான சினிமா


#காந்தாரா ஒரு நல்ல திரை அனுபவம், காட்சிகள் பிரம்மாதம், டெக்னிகல்லி ஒரு நல்ல கன்னட சினிமா.

ஆனால்,

அது சொல்ல வரும் செய்திதான் மிக ஆபத்தானது. மலைவாழ் மக்களின் நிலம் சம்பந்தமான பழக்கப்பட்ட கதைதான். ஒருபுறம் கைமாறாக கொடுக்கப்பட்ட நிலத்தை மீண்டும் அபகரிக்க திட்டமிடும் முதலாளித்துவ ஜமீன்தார், மறுபுறம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவித்து, மலைவாழ் மக்களை அந்த நிலத்தை விட்டு அகற்ற நினைக்கும் அதிகார வர்க்கம். இரண்டையும் எதிர்த்து சண்டையிடும் நாயகன் இறுதிக்காட்சியில் அதிகார வர்க்கம்தான் உங்களைக் காக்கும் அரணாக இருக்கும் என தன் மக்களை நம்பவைத்துவிட்டு காட்டுக்குள் சென்று மறைந்துவிடுகிறான். மக்களை நம்பவைக்க நாட்டார் தெய்வம் என்ற உத்தியை மிக அழகாக கையாண்டு வெற்றியும் கண்டிருக்கிறார் இயக்குனர்.

வனங்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் காலங்காலமாக அங்கு வாழ்ந்துவரும் மலைவாழ் மக்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டு, அங்கிருந்து துரத்தியடிக்கப்பட்டு அவர்களின் வாழ்வுமுறையும், வழிபாட்டு முறைகளையும் அடியோடு சிதைத்த அதிகார வர்க்கத்திற்கு ஆதரவான சினிமா என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

மேலும் ஒரு இஸ்லாமிய கதாபாத்திரம் ஒன்றை இந்தப் படத்தில் வலிந்து திணித்திருக்கிறார் இயக்குனர். நாட்டார் தெய்வத்தை வணங்கி வழிபாடு செய்யும், ஏறத்தாழ ஒரு 20-30 குடும்பங்கள் மட்டுமே வசிக்கும் ஒரு மழைவாழ் கிராமத்தில் ஒரேயொரு முஸ்லிம் வசிப்பதாக காட்டியிருப்பது ஒன்றே போதும், இது வலிந்து திணிக்கப்பட்ட ஒரு காதாபாத்திரம் என்பதற்கான ஆதாரம்.  நகைச்சுவைக்காக அந்தப் பாத்திரத்தின் செயல்பாடுகள் அவ்வப்போது நம்மை சிரிக்க வைத்தாலும், இறுதிக்காட்சியில் `ஸலாம் அலைக்கும்` என்று சொல்லிவிட்டு குண்டு வீசும் காட்சி, இயக்குநரின் பொதுப்புத்தியை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. அதை ஒரு நகைச்சுவைக் காட்சியாக இருக்குநர் வைத்திருக்கிறார். இப்போது நகைச்சுவை என்ற பெயரில்தான் எல்லாவற்றையும் நார்மலைஸ் செய்யப் பார்க்கிறார்கள். `பாய்க்கு ஏத்த சீன் கொடுத்திருக்காய்ங்கடா` என்று பக்கத்து இருக்கை ஆசாமிகள் கைகொட்டி சிரித்த போது, இயக்குநரின் வக்கிர உள்நோக்கம் வெற்றிபெற்றதை அங்கு உறுதிசெய்து கொண்டேன். `இஸ்லாமியர்கள் குண்டு வைப்பவர்கள்` என்ற பொதுப்புத்தியிலிருந்து இந்தச் சமூகம் வெளிவராமல் பார்த்துக்கொள்வதை தன் கடமையாக நினைத்து செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள் இந்த சினிமா இயக்குநர்கள்.

டெக்னிகல்லி ஒரு நல்ல திரைப்படம் இவ்வளவு தவறான செய்தியை மக்களிடம் கடத்துவது மிகவும் ஆபத்தானது.

Comments

Popular Posts