பேரா. காதர் முகைதீன் சாஹிபும் எங்களூர் அதிமுக அனுதாபியும்

சமீபத்தில் திமுக நடத்திய சிறுபான்மையினர் அணி மாநாட்டில் மரியாதைக்குரிய பேராசியர் காதர் முஹைதீன் ஸாஹிப் அவர்கள் பேசிய ஒரு கருத்து பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருப்பதாக அறிய முடிகிறது. ஏற்கனவே 'ஆறாவது கடமை' பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்தப் பேச்சை பேராசிரியர் அவர்கள் தவிர்த்திருந்திருக்கலாம். 

2011 சட்டமன்ற தேர்தல் என நினைக்கிறேன். எனக்குத் தெரிந்த தீவிர அதிமுக அனுதாபி ஒருவர் இருந்தார். கள்ளங்கபடமில்லாத நல்ல மனிதர். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக கட்சிப் பணி செய்தும் எந்த பொறுப்பும் அவர் கேட்டு வாங்கிப் பெற்றதில்லை. ``இத்தன வருசமா கட்சி கட்சினு அலையிறாரு, ஒரு போஸ்டிங் கூட வாங்கத் தெரியலையே அவருக்கு`` என்று ஊருக்குள் பலர் பேசிக்கொள்வது அவரது காதில் அரசல்புரசலாக விழுந்தாலும் அதை அவர் ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்ட மாதிரி தெரியவில்லை. ஒவ்வொரு தேர்தலின் போதும் கட்சிக்காக அயராது உழைக்கக் கூடியவராக இருந்தார். யாரிடம் பேச்சுக் கொடுத்தாலும் ``மறக்காம ரெட்டலைக்கு ஓட்ட போட்ருங்க`` என்ற வாசகத்தோடுதான் பேச்சை முடிப்பார். அம்மையார் ஜெயலலிதா மீது அளவற்ற பாசம் கொண்டவராகவும் 'அம்மா' புகழ்பாடுவதில் வல்லவராகவும் இருந்தார். அம்மையார் ஜெயலலிதாவை எப்பொழுதும் ``டாக்டர் புரட்சித்தலைவி அம்மா`` என்றே குறிப்பிடுவார். யாராவது அவரைப் பற்றி தவறாகப் பேசிவிட்டால் பொங்கிவிடுவார். 

இப்படித்தான் அந்தத் தேர்தல் பணியின் போது ஊரிலுள்ள திமுக, அதிமுக களப்பணியாளர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய வாக்குவாதத்தில், அம்மையார் ஜெயலலிதாவைப் பற்றி எதிர்தரப்பு பார்ட்டி ஒருவர் தவறாகப் பேசிவிட, இவருக்கு அடக்கமுடியாத கோபம். என்னதான் எதிர்தரப்பு திமுக வாக இருந்தாலும், எல்லோரும் ஒரே ஊர், சொந்தபந்தம் என்பதால் ஒரு அளவுக்கு மேல் இவரால் பேசமுடியல்லை. 'அம்மா'வ பத்தி அப்படியெல்லாம் தப்பா பேசாதீங்க என்று பலதடவை சொல்லிப்பார்த்தும் யாரும் கேட்டபாடில்லை. கடைசியில், ``நீயெல்லாம் என்னயா முஸ்லிமு, அம்மா காலடியிலதான் சொர்க்கம்னு ரஸூல்லாவே சொல்லிருக்காங்க, அவங்கள போயி தப்பா பேசுறியே``னு போட்டாரே ஒரு போடு! 

சுற்றியிருந்தவர்களுக்கு ஒரு நிமிடம் தலை சுற்றிவிட்டது!

-யாஸிர் கேயார்

Comments

Popular Posts