கபில் பைஸாலா வை தெரியுமா உங்களுக்கு?

கபில் பைஸாலா வை தெரியுமா உங்களுக்கு?

CAA க்கு எதிராக ஷாஹின் பாக்கில் அமைதி வழியில் போராடிக் கொண்டிருந்த மக்களை நோக்கி, டெல்லி போலீசார் முன்னிலையிலேயே இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டானே அவனே தான். யோகி ஆட்சி செய்யும் உ.பி யை சேர்ந்த அவன் மோடி ஆதரவாளவன் வேறு. துப்பாக்கியோடு கைது செய்யப்பட்டவனுக்கு சிறிது நாட்களிலேயே பிணை வழங்கி விட்டது நீதிமன்றம். பிணை வழங்கிய காரணங்களில் ஒன்று என்ன தெரியுமா? 

அவன் புள்ள குட்டிக்காரனாம் (Kapil has the responsibility of his wife and minor child.)


ஸஃபூரா வை தெரியுமா உங்களுக்கு?

Anti-CAA போராட்டத்தில் பங்குபெற்றதற்காக UAPA சட்டத்தில், அதாவது பிணையில் கூட வெளிவரமுடியாத அளவுக்கு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள கர்ப்பிணி பெண்.

அதென்ன UAPA சட்டம்?

சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம் (Unlawful Activities Prevention Act)

இந்தச் சட்டத்தின் பிரிவு 35-ன் படி அரசு நினைத்தால் எந்த ஒரு இயக்கத்தையும் தீவிரவாத இயக்கம் என்று அறிவிக்க முடியும். அவ்வாறு அறிவித்தால், அந்த இயக்கத்தில் அதுவரை உறுப்பினர்களாக இருந்த அனைவரும், தீவிரவாதிகளாகவே கருதப்படுவார்கள். மோடி அரசு 2019 ஆம் ஆண்டு இதிலும் ஒரு திருத்தத்தை கொண்டு வந்தது. அது என்னவென்றால், தனிநபர் ஒருவரை எந்தவொரு குற்றச்சாட்டு அல்லது விசாரணை இல்லாமல் பயங்கரவாதியாக அறிவிக்கலாம் என்பதே!

இந்தச் சட்டத்தின் படி, அதிகபட்சமாக ஒரு நபரை 90 நாட்கள் வரை எவ்வித விசாரணையுமின்றி நீதிமன்ற காவலில் வைக்க முடியும். அதேபோல், 180 நாட்கள் வரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் ஒருவரை சிறையில் அடைத்து வைத்திருக்க முடியும்.

இந்தச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நபர், எந்த நீதிமன்றத்திலும் முன்ஜாமீன் பெற முடியாது. அதேபோல் இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நபர் ஜாமீனில் வெளியே வருவது இயலாத காரியம். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் அதற்காக அமைக்கப்படும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவார்கள். இந்த நீதிமன்ற நடவடிக்கையை பொதுமக்களோ, பத்திரிகையாளர்களோ பார்ப்பதற்கு அனுமதியில்லை.

எமெர்ஜென்சி காலத்தில் இந்திரா காந்தி கொண்டு வந்த மிசா சட்டத்திற்கு ஒப்பானது UAPA Act என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

சரி, விசயத்திற்கு வருவோம். UAPA சட்டத்தில் கைது செய்யப்படும் அளவிற்கு ஸஃபூரா அப்படி என்ன செய்தார்?

Anti-CAA போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்களில் ஒருவர் எனவும், போராட்டத்தின் போது சாலையை மறித்தார் எனவும் FIR பதிவு செய்திருக்கிறார்கள்.
இப்போது சொல்லுங்கள் UAPA சட்டம் யார் மீது பாய்ந்திருக்க வேண்டும்? போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கியால் சுட்டு தீவிரவாதச் செயலில் ஈடுபட்டவன் மீதா அல்லது போராட்டத்தின் போது சாலையை மறித்து ஜனநாயக ரீதியில் எதிர்ப்பைக் காட்டியவர் மீதா?

ஸஃபூராவைப் போல Anti-CAA போராட்டத்தில் பங்குபெற்ற பல களப்போராளிகளை பிணையிலேயே வெளிவரமுடியாத அளவிற்கு UAPA சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது இந்த பாஸிச அரசு.

தனக்கு எதிராகப் போராடும் மக்களை கடுமையான சட்டங்களை கொண்டு அடக்கி ஒடுக்குகிறது. தனக்கு ஆதரவான குற்றவாளிகளை, அவர்கள் எவ்வளவு பெரிய தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் சப்பைக் காரணங்களைச் சொல்லி, பிணை வழங்கி விடுதலை செய்து கொண்டிருக்கிறது.

The Wire மின்னிதழ் 'Eight People the Modi Govt Gifted a Get-Out-of-Jail Free Card to Since 2014' என்ற தலைப்பில் முக்கியமான கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது (https://www.google.com/amp/s/m.thewire.in/article/government/modi-govt-get-out-of-jail-free-card/amp) மோடி அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து, விடுதலை செய்யப்பட்ட 8 நபர்களைப் பற்றி அது பேசுகிறது. அந்த 8 நபர்களில் அசீமானந்தா, பிரக்யா சிங் போன்ற குண்டுவெடிப்பு நடத்திய தீவிரவாதிகள் வரிசையில் கபில் பைஸாலாவும் ஒருவன்!

இந்தப் பெயரை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், பின்னாளில் ஒரு எம்.எல்.ஏ வாகவோ அல்லது ஒரு எம்.பி யாகவோ வந்து உங்களை ஆட்சி செய்து கொண்டிருப்பான்!

-யாஸிர் கேயார்

Comments

Popular Posts