முத்தம் ™

நான் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம், எனது தந்தை எங்கள் ஊரிலிருந்து சற்று தொலைவிலிருந்த தும்மநாயக்கன் பட்டி எனும் ஊரில் இமாமத் பணி செய்து கொண்டிருந்தார்கள். எங்கள் ஊர் மதரஸாவில் ஆண்டுவிழா! தம்பிபட்டி ஜும்ஆ பள்ளிவாசலில் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

தமுஎச வின் நாட்டுப்புற பாடல் ஒன்றை, அதன் மெட்டை மட்டும் எடுத்துக் கொண்டு பாடல் வரிகளை மாற்றி இசுலாமிய பாடலாக மாற்றியமைத்து, அந்தப் பாடலை என் தந்தை எனக்கு பயிற்சியளித்தார்கள்.

"ஏம் மனசு போற போக்க பாக்குறேன்!
அத எந்தன் மனசாட்சியிடம் கேக்குறேன்!
அடுத்தவங்கள யாரையும் நான் சொல்ல விரும்பல!

அய்யா ஏம் மனசு... அம்மா ஏம் மனசு..."

என்று ஆரம்பிக்கும் அந்தப் பாடல்!

உள்பள்ளி வெளிப்பள்ளி என குழுமியிருந்த மக்களுக்கு முன்னால், என் தந்தை சொல்லிக் கொடுத்தபடி பல சைகை பாவனைகள் செய்து அந்தப் பாடலை பாடி முடித்ததும், கைதட்டலுக்கு நடுவே கூட்டத்தை பிளந்துகொண்டு வெளிப்பள்ளியில் நின்றுகொண்டு என்னை ரசித்துக் கொண்டிருந்த என் தந்தையை நோக்கி ஓடிவந்து இறுகக் கட்டிப்பிடித்த போது, என் நெற்றியில் என் தந்தை கொடுத்த முத்தத்தை என் வாழ்நாள் உள்ளளவும் மறக்க முடியாது!

Comments

Popular Posts