திமுக மீது இஸ்லாமிய விரோத முத்திரை: பாஜக பாணியில் தவெக!
திராவிடக் கட்சிகள் குறிப்பாக திமுக, இஸ்லாமிய சமூகத்திற்கு எதிராக செயல்பட்டன என்ற ஒரு பிம்பத்தை திட்டமிட்டு கட்டமைக்கும் வேலைகளை சில புல்லுருவிகள் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். இது வெறும் அரசியல் விமர்சனம் அல்ல; ஒரு குறிப்பிட்ட அரசியல் அஜெண்டாவின் பகுதியாகவே பார்க்க வேண்டிய பிரச்சாரம்.
ஆனால், நடுநிலையாகச் சிந்திக்கக்கூடிய மக்கள் இந்தப் பொய்ப் பிரச்சாரங்களை எளிதில் நம்ப மாட்டார்கள். ஏனென்றால், இதே மாதிரியான கட்டமைப்பு அரசியலை தமிழ்நாடு ஏற்கனவே பார்த்துவிட்டது.
ஒரு காலத்தில் இதே வேலையை பாஜக தீவிரமாக செய்து வந்தது.
திமுகவை இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சி என்று சித்தரிப்பது; அதே நேரத்தில் இந்துக்களுக்கு எதிரான கட்சி என்றும், தலித்துகளுக்கு எதிரான கட்சி என்றும் ஒரே சமயத்தில் கட்டமைப்பது — இவை அனைத்தும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட அரசியல் பிரச்சாரங்கள்தான்.
ஆனால் அந்த முயற்சிகள் தமிழ்நாட்டில் எதிர்பார்த்த அளவிற்கு எடுபடவில்லை.
இப்போது அதே பழைய அரசியல் பிம்பக் கட்டமைப்பு, வேறு முகங்களிலும் வேறு வடிவங்களிலும் மீண்டும் செய்யப்படுகிறது.
கோட்பாட்டளவில் திராவிட இயக்க அரசியலின் பிரதான எதிரி யார்?
பார்ப்பனிய சமூக ஆதிக்கமும், சாதியப் படிநிலைகளும், சமூக அநீதியும் தான்.
கடந்த பல தசாப்தங்களாக திராவிடக் கட்சிகள் வெளிப்படையாக முன்னிறுத்தி வந்த அரசியல் சமூகநீதி அரசியல். அந்த அரசியலின் மையத்தில் சாதி ஆதிக்கத்திற்கு எதிர்ப்பு, இடஒதுக்கீடு, பிரதிநிதித்துவம் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கான உரிமைகள் ஆகியவை இருக்கின்றன.
அதனால்தான் திமுக போன்ற கட்சிகளுக்கும், இந்துத்துவ அரசியலை பிரதிநிதித்துவப்படுத்தும் பாஜகவுக்கும் இடையிலான முரண்பாடு வெறும் தேர்தல் போட்டி அல்ல; அது அடிப்படையில் கருத்தியல் முரண்பாடு. அதனால், கோட்பாட்டளவில் திமுகவின் பிரதான எதிரி பார்ப்பனியமும், அதனை அரசியல் ரீதியாகத் தூக்கிப் பிடிக்கும் பாஜகவும் தான்.
மறுபுறம், பாஜக தனது கோட்பாட்டளவிலேயே சிறுபான்மையினருக்கு எதிரான அரசியலை வெளிப்படையாக முன்னிறுத்தி வருகிறது. குறிப்பாக முஸ்லிம்களைப் பற்றிய அதன் பல்வேறு தலைவர்களின் பேச்சுகளும், அரசியல் நடவடிக்கைகளும், அவர்களை சம உரிமை கொண்ட குடிமக்களாக அல்லாமல் சந்தேகத்துடனும் இரண்டாம் நிலை குடிமக்களாகவும் கடடமைக்கும் வேலைகளை செய்து வருகிறார்கள். அதனால் இஸ்லாமியர்களின் நேர் எதிரான துருவத்தில் பாஜக இருக்கிறது.
அதேபோல், தலித் சமூகத்தின் அரசியல் முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய தடையாக இருப்பது சாதியப் படிநிலை அமைப்புதான். இந்தச் சாதியப் படிநிலைகளை நியாயப்படுத்தும் சனாதனக் கருத்தியலைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு அலையும் பாஜக, தலித்துகளுக்கு எதிரான கட்சி என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. ஆகவே தலித்களும், தலித் இயக்கங்களும் பாஜக எதிர்ப்பு அரசியலைத் தான் இங்கு மேற்கொண்டு வருகிறார்கள்.
ஆக, இந்த பாஜக எதிர்ப்புப் புள்ளியில்தான் தமிழ்நாட்டில் திமுகவும், இஸ்லாமியர்களும், தலித்துகளும் அரசியல் ரீதியாக இணைகிறார்கள். இந்த இணைப்பு உருவானது யாருடைய தனிப்பட்ட அழுத்தத்தால் உருவானது அல்ல. இயற்கையாகவே நடந்த ஒன்று.
சமூகநீதி, சிறுபான்மையினர் உரிமைகள் மற்றும் பாஜக எதிர்ப்பு என்ற பொதுவான அரசியல் புள்ளிகளில்தான் இந்த இணைப்பு உருவாகியுள்ளது.
அப்படியானால், இந்த இணைப்பை உடைக்க விரும்புபவர்கள் முதலில் என்ன செய்வார்கள்?
திமுகவை இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சி என்று கட்டமைப்பார்கள்.
திமுகவை தலித்துகளுக்கு எதிரான கட்சி என்று கட்டமைப்பார்கள்.
திராவிட அரசியலை இந்துக்களுக்கு எதிரான அரசியல் என்று கட்டமைப்பார்கள்.
ஒரே அரசியல் சக்தியை, ஒரே நேரத்தில் ஒவ்வொரு சமூகத்திற்கும் எதிரானதாக சித்தரிக்கும் இந்தப் பிரச்சாரத்தின் பின்னால் இருக்கும் அரசியல் நோக்கத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த இணைப்பை உடைப்பதற்காகத்தான் பல்வேறு வகையான பிம்பங்களும், பொய்ப் பிரச்சாரங்களும் தவெக-வால் சடடமன்றத்திலும், வெளியிலும் இன்று கட்டமைக்கப்படுகின்றன.
இந்த இடத்தில் ஒரு முக்கியமான கேள்வி:
பாஜகவை தனது கொள்கை எதிரி என்று அறிவித்துக்கொண்டு, பாஜகவின் அரசியல் நடவடிக்கைகள் மீது தீவிரமான விமர்சனத்தை முன்வைக்காமல் இருக்கும்,
பாஜகவின் சனாதன அரசியல் குறித்து நேரடியான விமர்சனத்தைத் தவிர்க்கும்,
பாஜக மீது அரசியல் அழுத்தம் உருவாக்க வேண்டிய இடங்களில் அமைதி காக்கும்,
மற்றவர்கள் பாஜகவை விமர்சித்தாலும், அந்தக் குரலை ஒடுக்கும்,
பாஜக மீது எந்தத் தூசும் படாமல் பார்த்துக் கொள்ளும் தவெக-வை இஸ்லாமியர்கள் எப்படி நம்புவார்கள்? ஏன் நம்ப வேண்டும்?
பாஜக எங்கள் கொள்கை எதிரி” என்று ஒரு வரியில் சொல்வது வேறு. அந்த எதிரியை அரசியல் களத்தில் தொடர்ந்து எதிர்கொள்வது வேறு. வார்த்தைகளில் எதிரி என்று சொல்லிவிட்டு, செயல்பாட்டில் அந்த எதிரியின் அரசியல் மீது மென்மையான அணுகுமுறையை வைத்துக்கொண்டு, அதே நேரத்தில் பாஜகவின் பிரதான அரசியல் எதிரியான திமுக மீது மட்டுமே முழு அரசியல் தாக்குதலையும் நடத்துவது என, நீங்கள் யாருக்கு வேலை செய்கிறீர்கள் என்பதை தோலுரித்துக் காட்டுகிறது.
மேலும்,
“பாஜக, பாஜக என்று எத்தனை நாளுக்குத்தான் பூச்சாண்டி காட்டுவீர்கள்?” என்று கேட்பவர்களைப் பார்த்தால் பலிதாபமாகத்தான் இருக்கிறது.
பாஜக என்பது யாரோ உருவாக்கிய கற்பனை பூச்சாண்டி அல்ல. இந்தியாவின் மத்திய ஆட்சியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக இருக்கும் ஒரு அரசியல் சக்தி.
அதன் பின்னால் நூற்றாண்டு கால RSS கருத்தியல் அமைப்பு உள்ளது. இந்தியாவை இந்து நாடாக மாற்றத் துடிக்கும் கருத்தியல் அது. அதன் அரசியல் நடவடிக்கைகள் சிறுபான்மையினர் உரிமைகள், மதச்சார்பின்மை, கூட்டாட்சி, சமூகநீதிக்கு எதிராக இருப்பது அனைவரும் அறிந்தது.
ஆனால் இவற்றைப் பற்றிய எந்த அரசியல் பிரக்ஞையும் இல்லாமல், அல்லது அவற்றைப் பற்றி பேசத் தயங்கிக்கொண்டு, திராவிடக் கட்சிகளை நோக்கி குறிப்பாக திமுகவை நோக்கி,
“இதோ பாருங்கள், இவர்கள் தான் இஸ்லாமியர்களின் உண்மையான எதிரிகள்!”
என்று கூறுவது அரசியல் விமர்சனம் அல்ல. அது ஒரு திட்டமிட்ட பிம்பக் கட்டமைப்பு, மோசடி.
ஆம், திராவிடக் கட்சிகள் தவறே செய்யவில்லை என்று யாரும் கூறவில்லை. சில இடங்களில் அவர்கள் சறுக்கியிருக்கலாம். சில முடிவுகள் விமர்சனத்திற்குரியதாக இருக்கலாம்.
சில தலைவர்களின் செயல்பாடுகள் கண்டிக்கப்பட வேண்டியதாக இருக்கலாம்.
அவற்றை விமர்சிக்க வேண்டும். ஆனால் விமர்சிப்பதற்கும், ஒட்டுமொத்த வரலாற்றையே தலைகீழாக மாற்றி எழுதுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது.
ஒரு சில சறுக்கல்களை வைத்து, சமூகநீதி அரசியலின் பல தசாப்த காலப் பயணத்தையே அழித்து, அதை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலாக சித்தரிக்க முயல்வது, அதுதான் இன்று நடைபெறும் உண்மையான அரசியல் மோசடி.
யார் எந்தக் கருத்தியலுக்காக நிற்கிறார்கள் என்பதையும் பாருங்கள். ஏனென்றால் அரசியலில் ஒரு சம்பவத்தை விட, ஒரு கட்சியின் கருத்தியல்தான் அதன் நீண்டகால திசையை நிர்ணயிக்கிறது.
அந்தக் கருத்தியல் கேள்வியில்,
சமூகநீதி, சிறுபான்மையினர் உரிமைகள், இடஒதுக்கீடு மற்றும் சாதி எதிர்ப்பு அரசியல் ஒருபுறம் நிற்கிறது.
மத அடையாள அரசியல், சனாதனக் கருத்தியல் மற்றும் பெரும்பான்மை ஆதிக்க அரசியல் மறுபுறம் நிற்கிறது.
இந்த இரண்டிற்கும் இடையிலான வேறுபாட்டை மறைத்துவிட்டு, திமுக மீது இஸ்லாமிய விரோத முத்திரையை குத்த முயல்பவர்களின் அரசியல் நோக்கம் என்ன என்பதை நடுநிலையான மக்கள் நிச்சயமாகப் புரிந்துகொள்வார்கள்.
Comments
Post a Comment