மக்கள் மனதில் இடம் பெற்ற மர்ஹூம் மகாராஜபுரம் ஷாகுல் ஹமீது இமாம்
ஆக்கம்: கே.ரஹ்மத்துல்லாஹ் மஹ்ளரீ
மர்ஹூம் ஷாகுல் ஹமீது ஃபைஜி
இமாமாக இமயம் தொட்ட, மக்கள் இதயம் தொட்ட எங்கள் அன்புக்கும் பாசத்துக்கும் உரிய புளியங்குடி ஷாகுல் ஹமீது ஹஜ்றத் இன்று காலை மரணித்து விட்டார். கடந்த சிலமாதங்களாக உடல்நலக் குறைவாக இருந்து நீண்ட சிகிச்சை பெற்றும் இறைநாட்டத்தால் இறைவனிடம் சென்றுவிட்டார். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
♦எங்கள் ஊரே கதி என்றிருந்தவர்
சொந்த ஊர் புளியங்குடியாக இருந்தாலும் ஆலிம் பட்டம் வாங்கிய பிறகு பெரும்பாலும் எங்கள் ஊர் மகாராஜபுரத்தில்தான் இருந்தார். விடுமுறையில் ஊருக்குச் சென்றாலும் மூன்றுநாள் விடுமுறை முடியும் முன்பே பணியிடம் திரும்பி விடுவார்.
♦சராசரி ஹஜ்ரத் அல்ல அவர்
பள்ளிவாசலில் ஏதோ தொழவைத்தோம். ஃபாத்திஹா ஓதினோம். நாலு காசு பார்த்தோம் என்றில்லாமல் வீடு வீடாகச் சென்று பெற்றோரிடம் எடுத்துக் கூறி பிள்ளைகளை அழைத்து வந்து மத்ரஸாவில் அவர்களுக்கு குர்ஆனை கற்றுக் கொடுத்து மார்க்க சட்டங்களையும் போதித்தார்.
அவரது விடாமுயற்சியாலும் தியாகத்தாலும் எங்கள் ஊர், மத்ரஸா மாணவர்களால் நிரம்பியது. பிள்ளைகளை அறபுக்கல்லூரிகளுக்கு அனுப்புமாறும் பெற்றோரைத் தூண்டினார்.
♦எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்தவர்
அவரே பாங்கு சொல்லி, இறையில்லத்தை மாணவ மாணவியர் மூலம் பெருக்கி சுத்தம் செய்து, தொழவைத்து மக்களுக்கு வழிகாட்டி எல்லோர் மனதிலும் இடம் பிடித்தார். மனதில் சிறிதும் மமதை இல்லை. பெருமை இல்லை. வெள்ளேந்தியான மனிதர். சொல்லால் செயலால் யாருக்கும் எந்தவிதமான தீங்கும் செய்யாதவர்.
♦எங்கள் வீட்டுப் பிள்ளையாகத் திகழ்ந்தவர்
பொதுவாக பணிபுரியும் ஓர் இமாமுக்கு அந்த ஊரின் சில முக்கியஸ்தர்களின் இல்லங்களில் மட்டுமே உணவு ஏற்பாடு செய்யப்படும். ஆனால்...அவர் பணிபுரிந்த எங்களது ஊரில் பணக்காரர், நடுத்தரவாசி, ஏழை என்ற பாகுபாடு இன்றி... எல்லாரும் அவருக்கு உணவு தருவோம் என்று முன்வந்திருக்கிறார்கள் என்றால், அவர் மீது ஊர் மக்கள் எந்தளவு பாசத்தோடும் நேசத்தோடும் இருந்திருப்பார்கள் என்பதை ஊகிக்கலாம்.
♦வாரி வழங்குவதில் வள்ளல் தன்மை மிக்கவர்
இதேபோல...ஊரில் ஏதாவது ஒரு நல்ல காரியத்துக்காக காசு வசூலித்தால் அதில் முதல் காசாக அவரது பாக்கெட்டிலிருந்துதான் விழும். அதற்குப் பிறகுதான் மற்றவர் காசு எழுதப்படும். அப்படி எங்கள் ஊருக்காக அவர் செய்த நல்ல காரியங்கள் ஏராளம், தாராளம்.
சிரமப்படுவோர் யாராக இருந்தாலும் கடன் கொடுத்து உதவுவார். வந்த கடனை ஏற்றுக் கொள்வார். வாராத கடனை இறைபொருத்தம் நாடி விட்டுக் கொடுத்து விடுவார்.
♦பெண்கள் மனதில் பெரிதும் இடம் பெற்றவர்
ஹஜ்ரத் தெருவில் நடந்து வந்தால் வீட்டு வாசல்களில் நிற்கும் பெண்கள் மரியாதை நிமித்தமாக உடனே எழுந்து உள்ளே சென்று விடுவார்கள்.
சமீபத்தில் அவரை நீக்கிவிட்டு வேறு ஆலிம் போடுவதாக ஒரு வதந்தி (உண்மைச் செய்தி அல்ல) கிளம்பியபோது... உடனே பெண்கள் மத்தியில் ஒரு பெரும் சலசலப்பு ஏற்பட்டு, பின்னர் ஜும்ஆவில், 'செய்தி உண்மை அல்ல வதந்தி!' என விளக்கம் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவ்வளவு பாசத்தோடும் நேசத்தோடும் இருந்த ஹஜ்ரத்தின் மரணம் எங்கள் ஊர் மக்களை குறிப்பாக தாய்மார்களை உலுக்கிப் போட்டு இருக்கிறது.
♦ஊரே திரண்டு ஜனாஸாவில் பங்கெடுப்பு
மரணித்த ஹஜ்ரத்தின் ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்ள மக்கள் எங்கள் ஊரிலிருந்து 7 வேன்களில் ஏறத்தாழ 200 க்கும் மேற்பட்டோர் புளியங்குடிக்குச் சென்றிருக்கிறார்கள். சொல்லப் போனால், ஊர் மக்கள் அனைவருமே சென்றுவிட்டார்கள் என்றுதான் சொல்லலாம். அந்த அளவுக்கு அவரது சேவையால் தியாகத்தால் மக்கள் மனதில் இடம் பிடித்திருந்தார்.
♦வாட்ஸப் தளங்களில் நிரம்பி வழிந்தவர்
இறந்த அறிவிப்புச் செய்தி வந்ததிலிருந்து எங்கள் பகுதியில் உள்ள உள்ளூர் மற்றும் வட்டார உலமா & இளைஞர் வாட்ஸப் தளங்கள் அனைத்திலும் அவரது புகைப்படம், இறப்புச் செய்தி, அதற்கான வருத்தங்கள், துஆக்கள் என நிரம்பி வழிந்தன; வழிகின்றன; இன்னும் வழியும்.
♦மத்ரஸா என்றால் ஹஜ்றத்துக்கு உசுரு
எப்ப பாத்தாலும் அங்கேயே கிடையாகக் கிடப்பார். காலை மத்ரஸா, மாலை மத்ரஸா, இரவு மத்ரஸா, விடுமுறை கால மத்ரஸா என எப்ப பாத்தாலும் மத்ரஸா மத்ரஸா... மாணவர் மாணவியர் என இருப்பார்.
நான்கூட சில நேரங்களில் ஏன் ஹஜ்றத் இப்படி உசுரக் கொடுக்குறீங்க? கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க என்றால் அவர் எதுவும் பதில் சொல்லாமல் நகர்ந்து விடுவார். பல்வேறு விதமான உடல் உபாதைகள் இருந்தாலும் அதை எல்லாம் வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஊருக்காக அதன் முன்னேற்றத்துக்காக உழைத்தவர் ஷாகுல் ஹமீத் ஹஜ்றத்.
♦இறைத்தூதரின் உண்மையான வாரிசு
فَلَعَلَّكَ بَاخِعٌ نَّـفْسَكَ عَلٰٓى اٰثَارِهِمْ اِنْ لَّمْ يُؤْمِنُوْا بِهٰذَا الْحَـدِيْثِ اَسَفًا
(நபியே!) இந்த வேத அறிவிப்பை அவர்கள் நம்பிக்கை கொள்ளாவிட்டால், அவர்களுக்காக கவலைப்பட்டு, நீர் உம்மையே அழித்துக் கொள்வீர்கள் போலும்! [அல்குர்ஆன் 18 : 06] என்ற இந்த இறைவசனத்துக்கு, முன் உதாரணமாக வாழ்ந்தவர் ஹஜ்றத் ஷாகுல் ஹமீது ஃபைஜீ.
♦எல்லார் இதயங்களிலும் இடம் பெற்றவர்
பரந்த மனப்பான்மை இல்லாத... விசாலமான எண்ணம் இல்லாத சகோதர உலமாக்களுக்கு ஒரு பாடமாகவும் திகழ்ந்தவர் ஹஜ்றத்.
ஊரில் உள்ளோர் அவர் தப்லீக் அமைப்பாக இருக்கட்டும். முஸ்லிம் லீக்காக இருக்கட்டும். தமுமுக அமைப்பாக இருக்கட்டும். எஸ்டிபி அமைப்பாக இருக்கட்டும். இன்னும் சொல்லப் போனால் டிஎன்டீஜே அமைப்பாகவே இருக்கட்டும். வேறு எந்த அமைப்பாக இருக்கட்டும். எல்லாருடனும் ஓர் இனிய நட்புறவு கொண்டிருந்தவர்.
அவர் பெரிய அளவு பேச்சாளர் இல்லை என்றாலும் எந்த அமைப்பைச் சார்ந்தவர்களையும் ஜும்ஆ உரைகளில் கூட்டியோ குறைத்தோ பேசி சலசலப்புகளையும் குழப்பத்தையும் ஏற்படுத்தாத ஒரு பக்குவமான மனிதர். அதனால்தான் அவரது ஜனாஸா நல்லடக்கத்தில் எல்லா அமைப்பைச் சார்ந்த சகோதரர்களும் கலந்து கொண்டனர்.
♦குறிப்பாக எனது மகளின் மக்தபு உஸ்தாத்
ஹஜ்றத்தின் மரணம் பெரும் துக்கத்தைத் தந்ததாலும் அப்படியே மலைத்து இருந்ததாலும் எதுவும் அவர் குறித்து எழுதத் தோன்றவில்லை. ஆனால், எனது மனைவி எனது மகளுக்கு ஹஜ்றத்தின் மரணச் செய்தயைச் சொன்ன மறுகணம் விசும்பி அழ ஆரம்பித்துவிட்டார். அதற்குப் பிறகுதான் இதை எழுதி பதிய வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது.
♦ஹஜ்றத்துக்காக இறைவனிடம் கையேந்துவோம்!
றப்புல் ஆலமீனே! அவரை மன்னித்து அருள்புரிவாயாக!அவரது குற்றம் குறைகளை பொறுப்பாயாக! அவரது மண்ணறையைச் சிறப்பானதாக ஆக்குவாயாக! அதை நெருக்கடி இல்லாமல் விசாலமானதாக ஆக்கி அருள் புரிவாயாக!
றப்புல் ஆலமீனே! தண்ணீராலும் பனிக்கட்டியாலும் குளிர்ந்த நீராலும் அவரைக் கழுவித் தூய்மைப்படுத்து வாயாக! அழுக்கிலிருந்து வெண்ணிற ஆடை தூய்மை யாக்கப்படுவது போல பாவங்களிலிருந்து அவரைத் தூய்மைப்படுத்துவாயாக!
றப்புல் ஆலமீனே! மறுமையில் அவருக்கு இங்கிருந்த வீட்டை விட சிறந்த வீட்டை, இங்கிருந்த குடும்பத்தை விட சிறந்த குடும்பத்தை, இங்குள்ள துணையை விட சிறந்த துணையைத் தந்தருள் புரிவாயாக!
றப்புல் ஆலமீனே! அவரைச் சுவனத்தில் நுழையச் செய்வாயாக! நரகத்திலிருந்து பாதுகாப்பாயாக! மண் ணறை வேதனையிலிருந்தும் நரக நெருப்பின் வேதனை யிலிருந்தும் அவரைப் பாதுகாத்து அருள்புரிவாயாக!
ஆமீன், யா றப்பல் ஆலமீன்!
▪︎ கே. ரஹ்மதுல்லாஹ் மஹ்ளரீ
Comments
Post a Comment