கம்பம் ஜக்கரிய்யா பெரியத்தா


மே 10 மாலை 3 மணி இருக்கும். அலுவலகத்தில் இருந்தபோது எனது உறவினர் பாளையம் ஷேக் முஹையதீனிடமிருந்து ஒரு கால் வந்தது. பணியில் இருந்ததால் பின்பு அழைத்து பேசிக்கொள்ளலாம் என்று இருந்துவிட்டேன். பின்பு தொடர்ச்சியாக எனது மனைவியிடமிருந்து கால். உண்மையில், தொடர்ச்சியான தொலைபேசி அழைப்புகள் வரும்போது `அது எந்த துக்கசெய்தியையும் கொண்டு வந்துவிடக்கூடாதே` என்று உள்ளம் பதறும். வழமையான நேரங்களைத் தவிர்த்து திடீரென ஊரில் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகளால் எப்போதுமே ஒரு பயமும் பதற்றமும் தொற்றிக்கொள்ளும். இந்தப் பதற்றம் முன்பு இருந்ததில்லை. ஆனால் கடந்த 3 வருடங்களாகவே இந்தப் பதற்றம் எனக்கு அவ்வவப்போது வருவதுண்டு. எனது இரத்த உறவினர்களுடன் ஏற்பட்ட சில பிரச்சினைகளும் மனக்கசப்புகளுமே இதற்கான முதன்மயான காரணங்களாக இருக்கலாம். புதிய பிரச்சினைகள் ஏதேனும் வந்துவிட்டதோ அல்லது ஏதேனும் துக்க செய்தியோ என்ற பதற்றம் வருவது இயல்பாகிவிட்டது.  அன்றும் அதே நிலைமை. `ஜக்கரியா மாமா இறந்துட்டாங்கமா` என்று என் மனைவி உடைந்த குரலில் சொன்னபோது அந்த நடுக்கமும் பதற்றமும் இன்னும் அதிகரித்தது. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எனது மனைவிக்கு `ஜக்கரியா மாமா`, எனக்கு பெரியத்தா. என் நேசத்திற்குரிய சகலை சஜாத்-ன் தகப்பனார். இரத்த உறவாக இல்லவிட்டாலும் திருமண பந்தம் மூலமாக அல்லாஹ் ஏற்படுத்திக் கொடுத்த அற்புதமான உறவு.

கனிவான முகம். என்றும் அதிர்ந்து பேசாதவர். அவர் கோபப்பட்டு பார்த்ததுமில்லை, கேள்விப்பட்டதுமில்லை. ஐவேளை தொழுகையையும் வக்து விடாமல் நிறைவேற்றி வந்தவர். என்மீது ப்ரியம் கொண்டவர். எப்போது அவரைப் பார்க்கச் சென்றாலும் எனது தாய், தந்தை பற்றி அன்போடு நலம் விசாரிப்பார். எனது உறவினர்கள் ஒவ்வொருவரையும் பற்றி கேட்டுத் தெரிந்துவைத்துக் கொள்வார். அவர்களுடைய பெயர் முதற்கொண்டு ஞாபகம் வைத்து அவர்களையும் நலம் விசாரிப்பார். வியப்பாக இருக்கும். இறப்புச் செய்தியறிந்த எனது தந்தை, அவ்வப்போது தனக்கு கால் செய்து அவர் அன்போடு நலம் விசாரிப்பதை நெகிழ்வோடு என்னிடம் பகிர்ந்துகொண்டார்கள். ஒருமுறை அவரைப் பார்க்கச் சென்றபோது ஒரு கைலியும் அத்தர் பாட்டிலும் கையோடு வாங்கிச் சென்றேன். பிரித்துப் பார்த்துவிட்டு `நல்லாருக்குத்தா` என்று சொல்லி அன்போடு வாங்கி வைத்துகொண்டார். 

கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக தனது மனைவி வஃபாத் ஆனதிலிருந்தே மனதளவில் தளர்ந்திருந்தார். உண்மையில், ஒரு ஆணை விட பெண் மனதளவில் வலிமையானவள். கணவனை இழந்த எத்தனையோ பெண்கள் நீண்ட நாட்கள் ஆரோக்கியத்துடனும் மனத்திடத்தோடு வாழ்பவர்களை நீங்கள் கண்கூடாக பார்க்கலாம். ஆனால் மனைவியை இழந்த ஆண்களுக்கு அதுவொரு சவாலான காரியம். ஆண் எப்போதும் பெண்ணைச் சார்ந்துதான் வாழ்கிறான். வாழ முடியும். இறைநியதி அதுவே. அதுவும் குறிப்பாக தன் கடமைகள் அனைத்தும் நிறைவேற்றிய 60 வயதைக் கடந்த ஆண்களுக்கு பெண்துணை கட்டாயம். தன் கணவனின் உடல்நலத்தில் எப்போதும் அக்கறை கொண்டவளாக, ஒரு ஆணின் ஆன்மபலமாக ஒரு பெண் எப்போதும் இருக்கிறாள். சில விதிவிலக்குகள் உண்டு. அப்படி தன்னைப் பார்த்துப் பார்த்துக் கவனித்துகொண்ட ஒரு ஆன்மாவை இழக்கும் போது, மனதளவில் ஒரு ஆண் உடைந்து போகின்றான். அதுவே அவனை மரணவாயிலுக்கு அருகாமையிலும் கொண்டு சென்றுவிடுகிறது.

மனைவியை இழந்து தனிமைத்துயரில் இருந்தவரை, உடனிருந்து இறுதிவரை அன்போடும் கனிவோடும் கவனித்து கொண்ட அவருடைய பிள்ளைகள், மருமகள் மற்றும் உறவினர்களுக்கு அல்லாஹ் அதற்கான நற்கூலியை வழங்குவானாக! தாய் தந்தை இருவரையும் இழந்துவாடும் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தாருக்கு அழகிய பொறுமையை தருவானாக!

ஜக்கரியா பெரியத்தா அவர்களின் பாவங்களை மன்னித்து அவருக்கு உயரிய சுவனத்தை வழங்குவானாக!

اَللّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنْ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْر

இறைவா!
இவரை மன்னிப்பாயாக!
இவருக்கு அருள் புரிவாயாக!
இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக!
இவர் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக!
இவர் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக!
இவரைத் தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக!
வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவரை குற்றத்திலிருந்து சுத்தம் செய்வாயாக!
இங்கிருக்கும் வீட்டை விடச் சிறந்த வீட்டையும், இங்கிருக்கும் குடும்பத்தை விடச் சிறந்த குடும்பத்தையும், இவருக்கு வழங்குவாயாக!
இவரை கப்ரின் வேதனையிலிருந்து காப்பாயாக!

ஆமீன்! யா ரப்பல் ஆலமீன்!


ப்ரியங்களுடன்
யாஸிர் கேயார்

Comments

Popular Posts