கடல்.. காற்று.. கங்குல்..


கடல்.. காற்று.. கங்குல்..

அதென்ன கங்குல்? தேடினேன் கூகுளில், கிடைத்ததோ சங்க இலக்கியப் பயன்பாட்டு உதாரணங்கள்

குறுந்தொகையிலிருந்து,

``கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே!``

திருவெம்பாவையிலிருந்து,

``கங்குல் பகலெங்கண் மற்றொன்றுங் காணற்க``

திருவாய்மொழியிலிருந்து,

``கங்குலும் பகலும் கண்டுயி லறியாள்``

என்ற பாடல்களின்வழி இரவு, இருள் என பொருள்கொள்கிறது கங்குல்!

`வார்த்தைகளைச் சடாரன்று அடைக்காதீர்கள்` என்ற வரியோடு புத்தகத்தின் முதல் கவிதை ஆரம்பமாகிறது. `புத்தகத்தைச் சட்டென மூடிவிடாதீர்கள், என் கவிச்சொற்கள் உங்களை பரவசமூட்டலாம்,  ஆச்சரியப்படுத்தலாம்` என்று மின்ஹாவின் அசரீரி கேட்பது போல் இருந்தது!

-----

`ஈரம் உணரப்படாத வறள்நிலத்திற்கு அன்பின் வாசனை ஏது?`

------

`விடைபெறுதல் என எழுதியும்
மை கசிவதை நிறுத்திவிட முடியாமல்
மேசையில் நனையும் காகிதங்கள்`

------

`மிடறு பருகித் தீர்க்கும் தாகமா
இருத்தலின் வெம்பசி`

------

`தீர்க்கமான முடிவுகளின் பின்
சொட்டும் துளிகளில்
வார்த்தைகளின் நகக்கீறல்`

------

`எல்லோரும் விட்டுச்சென்றான பின்
வீசும் காற்றுக்குப் பெயரே ஆறுதல்`

------

`அரிசியில் கூட கல் மண்
நீங்கியதாகப் பிரியப்படுகின்றனர்
மனிதர்களை எப்படிச் சலிப்பது?

இப்படி பரவசப்படுத்திய வரிகள் பல..!

`நிலத்தில் கட்டங்கள் வரைந்து
புள்ளடியிட்டு சதுரங்கள் விளையாடிய
உறவுகள் பிறிதொரு நாளில்
பூமியைப் பிய்த்துக் கொள்ள
வாதாடுகின்றன`

என்று நிகழ்கால உண்மைகளைப் பேசிய கவிதைகள் பல..!

Comments

Popular Posts