சொந்த ஊர் - ❤

சென்னைக்கு பிழைப்பு தேடி வந்த மக்கள், கொரோனா பரவலுக்குப் பயந்து சொந்த ஊருக்கு திரும்புவதை முன்வைத்து, ஏகப்பட்ட ஆதங்கப் பதிவுகள் கண்ணில் தென்படுகின்றன.

``இத்தனை நாள் வாழ்வு கொடுத்த இந்த நிலத்தை விட்டு எதற்கு இப்படி விரண்டோடுகிறார்கள், அவர்கள் திரும்பி சென்னை வரும் போது அனுமதிக்க கூடாது`` என்பது வரை புலம்பல்கள் அதிகம் கேட்கின்றன.

தமிழகத்தின் ஒவ்வொரு கடைக்கோடி கிராமத்திலிருந்தும் ஏதோ ஒரு கனவோடு கையில் சல்லிப்பைசா இல்லாமல் கிளம்பி வந்தவர்களையெல்லாம் பெரு முதலாளியாக்கி அழகு பார்த்திருக்கிறது இந்த நகரம். இப்படி "வந்தாரை வாழ வைக்கும் சென்னை" என்பதில் மாற்றுக் கருத்தில்லைதான். ஆனால், ஊறுகாய் கம்பெனி முதல் ஐடி நிறுவனங்கள் வரை அத்தனை தொழில் நிறுவனங்களையும் இப்படி ஒரே இடத்தில் குவித்து வைத்தால், மதுரையும் வந்தாரை வாழ வைக்கும், கோவையும் வந்தாரை வாழ வைக்கும், ஏன் குமரியும் வந்தாரை வாழ வைக்கும்.

அனைத்து சமூக மக்களும் வாழும் ஒரு நாட்டில் 'அதிகாரம்' மட்டும் ஒரே சமூகத்தை சேர்ந்த மக்களிடம் போய்ச் சேர்வது எப்படி சமூக அநீதியோ, அதேபோலத்தான் அத்தனை தொழில் நிறுவனங்களும் ஒரே இடத்தில் குவிக்கப்படுவதும். இதை நில அநீதி என்றுகூட சொல்லலாம். தொழில் நிறுவனங்கள் பரந்துபட்டு தமிழகம் முழுவதும் நிறுவப்பட்டிருந்தால் இத்தனை மக்கள் சென்னையை நோக்கி படையெடுக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது. சென்னைக்கு கிளம்பிச் சென்றால் எப்படியாவது பிழைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை ஒரு சாமானியனுக்கு ஏற்படுகிறதென்றால், அதற்கு காரணம் தமிகழத்தில் மற்ற நகரங்களை விட சென்னையில் இருக்கும் Exposures அதிகம்.

இப்படி சென்னைக்கு வருபவர்களில் பெரும்பாலானோர் இங்கேயே சொத்து வாங்கி செட்டில் ஆகும் நோக்கத்தோடு வருவதில்லை. இதை ஒரு தொழில் நகரமாகத்தான் அணுகுகிறார்கள். பிழைக்க வந்த இடமாகத்தான் கருதுகிறார்கள். மற்ற மாவட்ட மக்களைப் பொறுத்தவரை, எப்படி வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்கிறார்களோ அதைப் போலத்தான் சென்னையும். இந்த மனநிலையில் இருக்கும் மக்கள், பிழைக்க வந்த இடத்தில் ஏதேனும் இடர்பாடுகள் ஏற்படும் போது சொந்த ஊரை நோக்கித்தான் செல்வார்கள். ஒரு குழந்தை தன் தாய்மடியை தேடுவதைப் போலத்தான் பலருக்கு சொந்த ஊரும்!

சொர்க்கமே என்றாலும், அது
சொந்த ஊரைப் போல வருமா?

-யாஸிர் கேயார்

Comments

Popular Posts