அத்தர்

புத்தகக் கண்காட்சிக்கு முன்பே இணையவழிக் கொள்முதல் மூலம் அத்தர் கைவரப் பெற்றேன். கடந்த இரண்டு வருடங்களாக சிறுகதைகள் மீதான ஆர்வம் உள்ளத்தில் துளிர்விட்டு வந்ததன் விளைவு, வசீகரமான தலைப்பு, சீர்மை வெளியீடு, பத்தாண்டுகளாக அத்தா பணி செய்த சிங்கப்பூர் எனும் நாடு, `உம்மாவின் துப்பட்டி` சிறுகதையைப் பற்றி அங்கொன்றும் இங்கொன்றுமாக படித்த விமர்சனங்களின் தாக்கம் என `அத்தரை`ப் படிக்க ஆர்வம் தூண்டிய காரணங்கள் என அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஒரு தாளமுடியாத துயரம், நேசம், நெகிழ்வு, துரோகம், நம்பிக்கை என ஒவ்வொரு கதையிலும் மனித உணர்வுகளை சிறிது சிறிதாக முடிந்து வைத்து, கதையின் இறுதி அத்தியாயத்தில் அல்லது வரியில் அதை அவிழ்த்துக் காட்டி நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார் நூலாசிரியர்.

முளரி எனும் சிறுகதை பழங்குடிகளைப் பற்றியது. ஒரு அட்வெஞ்சரஸ் போன்ற சுவாரஸ்யமான கதையினூடாக சுருக்கென்று உரைக்கும் அதிகார வர்க்கத்தின் தவறுகளையும் சுட்டிக் காட்டிச் செல்கிறார்.

`உலகத்தில் எந்த மூலையில் உள்ள  பழங்குடி மக்களும் சந்திக்கும் ஒரே மாதிரியான பிரச்சினை `வளர்ச்சி` என்ற பெயரில் அவர்களுடைய வாழ்விடங்களைப் பறித்துக் கொண்டு அவர்களை நகரங்களில் கொண்டுபோய் குடியமர்த்துவது`

`நகர வாழ்க்கையில் அமைதி என்று எதுவுமில்லை. அது வசந்த காலத்தைப் பற்றி, இலையுதிர் காலத்தைப் பற்றி, பருவநிலைகளைப் பற்றி என எதைப்பற்றியும் பிரக்ஞையற்ற இரும்பு இதயம், அவ்வளவுதான். ஆனால் காடு அப்படியல்ல, அது உலகின் நுரையீரல். சுத்தமான காற்றை, மழைமேகங்களை மனிதர்களுக்குப் பரிசளிக்கிறது` என கதையினூடாக நெஞ்சில் பதியும் சில எதார்த்தங்களையும் தெளித்துவிட்டுச் செல்கிறார்.

`அலைகள்` என்றொரு அழகியல் கதையில் வரும், `சட்டைப் பையில் வைத்திருந்த தூண்டுச்சீட்டு அனலாகத் தகித்துக்கொண்டிருந்தது` என்ற வரி, நம் மனதை அந்தக் கதாபாத்திரத்தினுள் ஊடுருவச் செய்து, நம் உள்ளத்தையும் தகிக்கச் செய்கிறது. இந்தக்கதை ஏதோவொரு வகையில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் வெளிவந்த இயற்கை திரைப்படத்தை நினைவுபடுத்தியதை தவிர்க்கமுடியவில்லை.

தொகுப்பின் மிகக்கவர்ந்த சிறுகதை `உம்மாவின் துப்பட்டி`. நேசத்தின் நினைவாக, காதலின் கடைசிப்பிடியாக, பிரிவுத்துயரின் ஒற்றை சாட்சியாக, திரும்பி வருவாய் என்ற நம்பிக்கையின் வெகுதூரத்து ஒளிக்கீற்றாக, வாழ்தலுக்கான பிடிமானமாக இருக்கும் பூக்கள் மங்கி வெளிறிப்போன உம்மாவின் துப்பட்டியை இந்தக் கதையின் ஆன்மாவாக நமக்குள் கடத்தியிருக்கிறார்.

உம்மாவின் துப்பட்டி கதைக்கும் அலைகள் கதைக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. உம்மாவின் துப்பட்டி கதையில் வரும் இஸ்மாயிலின் அம்மாவும், அலைகள் கதையில் வரும் ரியாந்தி-ன் அம்மாவும் ஏதோவொரு வகையில் தம் கணவரைப் பிரிந்தவர்கள். தன் கணவரின் ஞாபகர்த்தமாக இஸ்மாயிலின் அம்மாவிற்கு துப்பட்டியும், ரியாந்தி-ன் அம்மாவிற்கு வெள்ளைக்கல் பதித்த வெள்ளி மோதிரமும் இருக்கிறது. என்றாவது ஒருநாள் தன் கணவர் திரும்பி வருவார் என்ற ஏக்கத்துடன், என்றோ அவர் வாங்கிக் கொடுத்த துப்பட்டியை அணைத்துக்கொண்டு காத்திருக்கும் இஸ்மாயிலின் அம்மா, ஆனால் கடைசிவரை திரும்பிவராத இஸ்மாயிலின் வாப்பா. சுனாமியால் தன் கணவனைப் பிரிந்து, தாளமுடியாத துயரத்தைக் கடந்து, ஒரு புதிய நேசத்திற்காக தன்னை மனதளவில் தயார்படுத்தி நிற்கும்வேளை, வெள்ளைக்கல் பதித்த வெள்ளி மோதிரத்தோடு திரும்பி வந்து நிற்கிறார் ரியாந்தி-ன் வாப்பா. வாழ்க்கை எவ்வளவு புதிரானது பாருங்கள்!

ஒவ்வொரு கதையிலும் ஒரு மென்சோகத்தை படரவிட்டு நம்முள் நறுமணத்தை கமழவிட்டுச் செல்கிறது இந்த அத்தர்!

-யாஸிர் கேயார்

Comments

Popular Posts