நாம் தமிழர் கட்சியும் நமது இளைஞர்களும் - புரிதலுக்காக சில தகவல்கள்

ஆக்கம்: யாஸிர் கேயார்   - மே 14, 2020

கடந்த சில தினங்களாக சமூக வலையதளங்களில் பரவலாக ஒரு காணொளி பேசுபொருளாக ஆகிக் கொண்டிருக்கிறது. அந்தக் காணொளியில் நாம் தமிழர் கட்சியில் பயணிக்கும் ஒரு இசுலாமிய இளைஞர் ஒரு மாற்று மத பெண்ணை திருமணம் செய்வதற்கு முன்பு உதித்த வார்த்தைகள் தான் இவை,

"தமிழரின் முப்பாட்டன் சிவனை வணங்கி
ஆறுபடை முருகனின் ஆசியோடு..." அந்தப் பெண்ணை கரம் பிடிப்பதாக கூறுகிறார்.

முஃமினான பெண்ணை மணமுடியுங்கள் என்ற மார்க்க அறிவுறுத்தலை மறுத்து அவர் மாற்றுமத பெண்ணை திருமணம் முடித்த போதே அந்த இளைஞர் இஸ்லாமிய கொள்கையிலிருந்து வெளியேறி விட்டார். இருந்த போதிலும் அவர் இந்த நிலமைக்கு வருவதற்கு நாம் தமிழர் கட்சி, அந்த இளைஞரின் வாழ்வில், கொள்கையில் ஏற்படுத்திய தாக்கத்தை பற்றியே இங்கு விளக்க விரும்புகிறேன்.

சரியாக 6 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு மேடையில் சீமான் ஒரு செய்தியை முன்வைக்கிறார்.

"இன்னும் சரியாக 10 ஆண்டுகளில் நான் கட்டமைக்கும் இந்த மதத்தில் தான் தமிழர்களில் பலர் இருப்பார்கள்.."

அந்த மதத்தின் பெயர் 'தமிழம்'
அந்த மதித்தின் வழிபாடு 'இயற்கை'
அந்த மதத்தின் தெய்வங்கள் 'நம் முன்னோர்கள்'
அந்த மதத்தின் வேதநூல் 'திருக்குறள்'

இந்தச் செய்தி அனைத்தும் அந்தக் காணொளிலியில் பதிவாகி இருக்கிறது.

அதுதான் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகின்றது.

நாம் தமிழர் கட்சி ஆரம்பித்ததில் இருந்து கவனித்து வருகிறேன். அது தன் கொள்கைகளில் அவ்வப்போது சில மாற்றங்களை செய்து கொண்டே வருகிறது. சில புதிய விசயங்களையும் புகுத்தி வருகிறது. அது எடுத்து வைக்கும் அரசியல் நிலைப்பாட்டைத் தாண்டி, தமிழர் வாழ்வியல் முறை என்ற தத்துவத்தையும் முன்வைக்கிறது. மேலும் தமிழரின் ஆன்மீக வாழ்வியல் முறையை மீட்டெடுக்கிறேன் என்ற கூறி சிவன், முருகன் ஆகியோரை தமது ஆதி மூதாதையர்கள் என கூறுகிறது. அந்த மூதாதையர்களுக்கு மரியாதை செலுத்துகிறோம் என்ற அடிப்படையில் தற்போது அவர்களுக்கு வழிபாடு செய்யவும் ஆரம்பித்து விட்டார்கள். அந்த நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் அந்த வழிபாட்டை செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் கட்சியின் கொள்கை நிலைப்பாட்டிலும் முருகனும் சிவனும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்பதே இங்கு சிக்கல். 

ஒரு அரசியல் கட்சி என்ற அடிப்படையில், மற்ற கட்சிகளில் முஸ்லிம்கள் எவ்வாறு பயணிக்கிறார்களோ, அதே போல நாம் தமிழர் கட்சியிலும் முஸ்லிம்கள் பயணிப்பதில் எந்தத் தவறும் இல்லை. அது அந்த கட்சியின் அரசியல் நிலைப்பாட்டை மட்டும் கருத்தில் கொண்டு பயணிக்கும் வரை நல்லது. ஆனால் அந்தக் கட்சி முன்வைக்கும் 'தமிழர் வாழ்வியல் முறை' யில் தான் பெரிய சிக்கல் இருக்கிறது. அது இஸ்லாமிய மார்க்க அடிப்படையில் 'அல்லாஹ்வுக்கு இணைவைக்கும்' மனநிலைக்கு இளைஞர்களை கொண்டு செல்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. அதற்கு நிகழ்கால உதாரணம் தான் இப்போது பேசுபொருளாக மாறியிருக்கும் அந்த இளைஞரின் திருமண வீடியோ.

என் அன்புச் சகோதரர்களே, ஒன்றில் மட்டும் நாம் எப்போதும் தெளிவோடு இருக்க வேண்டும்.

நாம் இஸ்லாம் என்ற மார்க்கத்தை 'ஒரு வாழ்வியல் நெறியாக' ஏற்றுக் கொண்டிருக்கிறோம். அதில் 'இறைவன் ஒருவனே; அவனுக்கு இணையாக எவனும் இல்லை" என்ற கொள்கையை உறுதியாக ஏற்றுள்ளோம்.

நாம் தமிழர் கட்சி 'ஒரு வாழ்வியல் முறையை' முன்வைக்கிறது. அதில் மூதாதையர்களுக்கு மரியாதை செய்கிறோம் என்ற அடிப்படையில், அது ஏக இறைவனுக்கு இணைவைப்பு செய்யும் அளவுக்கு நமது இளைஞர்களை கொண்டு செல்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளைப் பற்றி படிப்பதற்கு முன்பு, நாம் ஏற்றுக்கொண்ட கொள்கையை பற்றி எந்தளவுக்கு படித்திருக்கிறோம் என்று சிந்தித்துப் பாருங்கள்!

ஆகவே எந்தக் கட்சியில் நீங்கள் இருந்தாலும், நம்முடைய கொள்கையில் உறுதியாக நின்று ஈமானை இழக்காமல் பயணிக்க வேண்டும் என்பதே என்னுடைய வேண்டுகோள்.

வசீகரமான பேச்சுக்களுக்கு மயங்கி நமது ஈமானை இழந்து விட வேண்டாம்; சிந்திக்கும் ஆற்றலை இறைவன் நமக்கு கொடுத்திருக்கிறான். உணர்ச்சிகரமான மனநிலையிலிருந்து விடுபட்டு, அறிவுப்பூர்வமாக சிந்திப்பதில் தான் நம் எதிர்காலம் இருக்கிறது!


ப்ரியங்களுடன்,
யாஸிர் கேயார்

Comments

Popular Posts