ஆன்டி இண்டியன் - சுன்னத் விவகாரம்

ஒருமுறை என்னுடைய அலுவலக நண்பர்களுடனான உரையாடலில் 'சுன்னத்' சம்பந்தமான டாபிக் வந்தது. அந்த உரையாடலில் நான் மட்டும் முஸ்லிம், மற்றவர்கள் சகோதர சமயத்தவர்கள். நண்பர் ஒருவர் சுன்னத் சம்பந்தமாக அவர் கேள்விப்பட்டதை பகிர்ந்துகொண்டார்.

``சுன்னத் செய்யப்பட்ட ஆணுறுப்பின் நுனித்தோலை, அன்று நடக்கும் சாப்பாட்டு விருந்தில் சமைக்கும் போது போட்டு விடுவார்கள் என்றும், பந்தியில் அந்த துண்டு கிடைப்பவர் அதிர்ஷ்டசாலி என்றும்`` அவர் கேள்விப்பட்டதாக சொன்னபோது எனக்கு மிகவும் வேடிக்கையாகவும் அதேநேரத்தில் அதிர்ச்சியாகவும் இருந்தது.

அடப்பாவிகளா!

எனக்கு விவரம் தெரிந்து இதுவரை இப்படி ஒரு சம்பவத்தை நான் கேள்விப்பட்டதே இல்லை. இப்படியொரு அருவருப்பான செயலை செய்வதற்கு யாராவது அனுமதிப்பார்களா? இதுவொரு இட்டுக்கட்டப்பட்ட கதை. இஸ்லாமிய பழக்கவழக்கங்கள் சம்பந்தமாக இப்படிப்பட்ட பல கட்டுக்கதைகள் மாற்று சமயத்தவர்களின் மத்தியில் பரப்பபட்டு உலவிக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட கதையில் ஒன்றைத்தான் உண்மை என நம்பி ஒரு படமாக எடுத்து வைத்திருக்கிறார் ப்ளூசட்டை மாறன்.

மாறன் இயக்கிய ஆன்டி இண்டியன் படத்தில், சுன்னத் செய்யப்படாத ஒரு இறந்தவர் சடலத்தை பள்ளிவாசல் மய்யவாடியில் அடக்கம் செய்வதற்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், கடைசியில் அந்த பிணத்திற்கு(!) சுன்னத் செய்த பின்பே அடக்கம் செய்யப்படுவதாகவும் காட்சியமைப்புகளை வைத்திருக்கிறார்.

அடப்பாவிகளா! (Again)

இதுவரை இப்படியொரு சம்பவம் நடந்ததாக கேள்விப்பட்டதுமில்லை, அது இஸ்லாமியர்களின் வழக்கமுமில்லை, நடைமுறையிலும் இல்லை. செத்த பிணத்திற்கு சுன்னத் செய்தால் தான் இஸ்லாமியர்கள் அந்தப் பிணத்தை அடக்க அனுமதிப்பார்கள் என்ற இல்லாத ஒரு நடைமுறையை படம் நகர்வதற்கான ஒரு முக்கிய காரணமாக காட்டி காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். உண்மையில் இது இஸ்லாமியர்களின் வாழ்வியலைப் பற்றிய அடிப்படை புரிதல் கூட இல்லாமல் படமெடுத்திருப்பதாகவே தோன்றுகிறது.

கொரோனா காலங்களில் சாதி, மதம் பார்க்காமல், அவரவர் சடங்குப்படி இறந்தவர் உடல்களை அடக்கம் செய்த ஒரு சமூகத்தை அடிப்படை அறிவற்று காட்சிப்படுத்தியிருப்பது மாறனின் பிற்போக்குத்தனத்தை காட்டுகிறது அல்லது எல்லா மதங்களையும் சரிசமமாக விமர்சிக்க வேண்டும் என்ற நட்ட நடுநிலையெனும் முட்டாள்தனத்தையே காட்டுகிறது. அந்த விமர்சனத்தில் உண்மையில்லையெனும் பட்சத்தில் இயக்குனரின் பார்வையில் மிகப்பெரிய கோளாறு உள்ளதாகவே கருத வேண்டும்.

படம் 18 நாட்களில் எடுத்து முடித்திருந்தாலும், கதை எழுதி அதில் எந்த லாஜிக் மீறல்களும் வந்துவிடக் கூடாது என்பதற்காக, அதை ஃபைன் ட்யூன் செய்வதற்கு 8 மாதங்கள் எடுத்துக் கொண்டதாக மாறன் சொல்கிறார். ஆனால் கடைசியில் உண்மைக்குப் புறம்பான காட்சிகளுடன் படம் வெளிவந்திருக்கிறது. இதைப்பற்றி அவருடைய துணை இயக்குநர்கள் ஒருவர் கூடவா எடுத்துச் சொல்லவில்லை. அவர்களை விடுங்கள், தயாரிப்பாளர் ஆதம் பாவா என்ன சொல்கிறார் தெரியுமா? அது உண்மை இல்லை என்று தெரியும் இருந்தாலும், இயக்குநரின் படைப்புச் சுதந்திரத்தில் தலையிட விரும்பவில்லை(..!). ஆக அந்த சம்பவம் வலிந்தே திணிக்கப்பட்ட ஒரு பொய்.

மனிதம், மனிதநேயம் என்ற கருவை மையமாக வைத்து கதை பின்னி Safe Game ஆடியருக்கிறார் மாறன். அதற்காக ஒரு மதத்தின் அடிப்படைவாதத்தை காட்டுகிறேன் என்ற பேர்வழியில், அந்த சமூகத்தாரிடம் இல்லாத ஒரு பழக்கத்தை, தற்போது நடைமுறையில் இருப்பதாகக் காட்டி பெரும்பான்மை மக்களின் மன ஓட்டத்தில், அந்த சமூகத்தைப் பற்றிய ஒரு தவறான பிம்பத்தை கட்டமைத்து, மிகப்பெரிய வரலாற்றுப் பிழையை செய்திருக்கிறார் மாறன். 

மாறன் அவருடைய சினிமா விமர்சனத்தில் அடிக்கடி ஒன்றைக் குறிப்பிடுவார்.

``இவிய்ங்கெல்லாம் எதுக்கு படமெடுக்க வர்றாய்ங்க?!., ஒன்னு நாம எதப்பத்தி படம் எடுக்குறோமோ அதப்பத்தி நல்லா படிச்சிட்டு வந்து எடுக்கனும், இல்லன்னா தெரிஞ்சவன்ட்ட கேட்டாவது எடுக்கனும்``

டாட்.





Comments