புத்தகத்தின் விதியே அது இடம் மாறி போய்கொண்டேயிருப்பதுதானே!

எஸ் ரா வின் `மலைகள் சப்தமிடுவதில்லை` என்ற நூலை வாசித்துக் கொண்டிருக்கிறேன். அதில் `ரிச்சர்ட் பெயின்மேன்` எனும் இயற்பியல் விஞ்ஞானியைப் பற்றிய கட்டுரை. எஸ் ரா, அந்த விஞ்ஞானி பற்றியும், பெயின்மேன் எழுதிய சில புத்தகங்களைப் பற்றிய அனுபவங்களையும் தனது நண்பரோடு பகிர்ந்து கொள்வதாய் அந்தக் கட்டுரை நீள்கிறது.

நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானியான ரிச்சர்ட் பெயின்மேன் எழுதிய `Surely You're Joking Mr. Feynman!` என்ற சுயசரிதை நூலில் அவர் வாழ்வில் நடந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளைப் பற்றி அந்தக் கட்டுரையில் விரிவாக எழுதியிருந்தார் எஸ் ரா.

அந்த நண்பர் பெயின்மேனைப் பற்றி ஒரு திரைப்படம் வந்திருப்பதாகவும், அதை உங்களுக்கு அனுப்பித் தருவதாகவும் சொல்லிவிட்டு விடைபெறுகிறார்.

நண்பரோடு ஏற்பட்ட உரையாடலின் தாக்கமாக, மீண்டும் அந்த நூலை வாசிக்க விரும்பும் எஸ் ரா,

`இன்னொரு முறை பெயின்மேன் புத்தகத்தை படிக்க ஆர்வமாக இருந்தது. புத்தகக் குவியல்களுக்குள் எங்கேயிருக்கிறது என்று தேட வேண்டும். தேடும்போதுதான் அதை யார் எடுத்துப் போயிருக்கிறார்கள், எங்கே என்ற விபரங்கள் நினைவுக்கு வரும். உலகில் மிக சிரமமானது புத்தகங்களை காப்பாற்றி வைப்பதுதான். ஆனாலும், புத்தகத்தின் விதியே அது இடம் மாறி போய்கொண்டேயிருப்பதுதானே`

என்று அந்தக் கட்டுரையை முடிக்கிறார்.

எவ்வளவு எதார்த்தமான வரிகள்!

நான்கு நாட்களுக்கு முன்பு மகாராஜபுரத்தில் எங்கள் வீட்டிலுள்ள வாப்பாவின் அலமாரியிலிருந்த எஸ் ரா வின் `மலைகள் சப்தமிடுவதில்லை` என்ற இந்த புத்தகம், சென்னையில் இன்று என் கைகளில் தவழ்ந்துகொண்டிருக்கிறது!

புத்தகத்தின் விதியே அது இடம் மாறி போய்கொண்டேயிருப்பதுதானே!


Comments

Popular Posts