இருள்
நான்கு வருடங்களுக்கு முன்பு எழுதியது.. பிப்ரவரி 2021 கடந்த 2 மாத காலமாக இரவில் விழிப்பு ஏற்பட்டால் மீண்டும் தூக்கம் வர மறுக்கிறது. சில காரணங்களால் மனைவி, பிள்ளை சொந்த ஊரில் இருக்கிறார்கள். யாருமே இல்லாததால் நடு ஹாலில் தரையில் மெத்தையை விரித்து தூங்குவது வழக்கம். நான்கு பேர் தங்க வேண்டிய வீட்டில் நான் ஒருவன் மட்டும் தனியாகத் தூங்குவதால் ஒரு நிசப்தம், பேரமைதி நிலவுகிறது. சிறிய சத்தம் கூட பூதாகரமாக கேட்கிறது. மனம் படபடத்து விடுகிறது. இரவு 10 மணிக்கு மேல் சமையலறையிலிருந்து ஒரு சத்தம் 30 விநாடிகளுக்கொருமுறை வருகிறது. சில நேரம் 45 நொடிகள் பிடிக்கிறது. டைமர் வைத்து செக் செய்து விட்டேன். மேலிருந்து பாத்திரத்தின் மீது ஒரு சிறிய கல் விழுவது போன்று இருக்கிறது. பகலில் இந்தச் சத்தத்தை கேட்டதே இல்லை. இரவில் மட்டும் கேட்கும் போது பீதியாக இருக்கிறது. பயத்துடனே தூக்கம் வர தாமதிக்கிறது. போர்வையை இழுத்து மூடி ஒரு ஜனாஸா போல் படுத்துக்கொள்வேன். எழுந்து சமயலறைக்குச் சென்று என்னவென்று பார்க்க தைரியமில்லை. சிந்தனையை வேறுபக்கம் திருப்பி தூக்கத்தை வலுக்கட்டாயாமாக திணிக்க வேண்டியிருக்கிறது. எப்படியோ ...